எல்லை மீள் நிர்ணயக் குழு உள்ளூராட்சிச் சபைகளின் புதிய எல்லைகளை வகுத்து, தொகுத்து இடைக்கால ஆவணம் ஒன்றை விடயதானத்திற்குப் பொறுப்பான அமைச்சரான பிரதமரிடம் கையளித்துள்ளது. எண்ணாயிரத்துக்கும் அதிகமான உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை பாதியளவுக்கு குறைக்கும் நோக்கத்திற்கமைய, நடைமுறையில் உள்ள அடுத்தடுத்து அமைந்துள்ள வட்டாரங்களின் பிரதேசங்கள் இணைக்கப்பட்டு புதிய வட்டாரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
பிரதேசத்தின் பரப்பளவு, மக்கள் தொகை போன்ற பல காரணிகளை கருத்திற்கொண்டு வட்டாரங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக எல்லை நிர்ணய ஆணைக்குழுவினர் தெரிவித்தாலும், புதிய வட்டார உருவாக்கங்கள் பற்றிய சர்ச்சைகள் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் வெளிவருவதைக் காணலாம்.
மக்கள் பிரதிநிதிகள், சமூக அமைப்புகள் போன்றவற்றின் காத்திரமான பங்களிப்புகள் கோரப்படாமலும், அவர்களுக்கு போதியளவு தயார்படுத்தலுக்கான வாய்ப்புகளை வழங்காமலும், மாவட்டச் செயலகம் பிரதேச செயலகம் தேர்தல் செயலகம் ஆகியவற்றின் அதிகாரிகள் சிலர், தமது எண்ணங்கள் விருப்புகள் தேவைகள் கிடைத்த தரவுகளின் அடிப்படையில், முழுமையான சமூக அர்ப்பணிப்பின்றி தயாரிக்கப்பட்ட ஆவணமாகவே இடைக்கால வரைபு வெளிவந்துள்ளது.
வட்டார எல்லைகள் மீள ஒழுங்கமைக்கப்பட்ட போது, ஒவ்வொரு உள்ளூராட்சி சபை சார்ந்த பிரதேசத்தினதும் அரச நிர்வாகத்தில் செல்வாக்கு செலுத்திய சில அதிகாரிகள், தமது மொழி இனம் மதம் சாதி சார்ந்த செயற்பாடுகளை உட்புகுத்தியுள்ளார்களோ என சந்தேகப்படும அளவுக்கு விமர்சனங்கள் எழுகின்றன.
அதன் அர்த்தம், அரசியல்வாதிகளினால் வரைபு தயாரிக்கப்பட்டிருந்தால் எல்லை நிர்ணயப் பணி நூறுவீதம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டிருக்கும் என்பதல்ல. அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் பல சுற்றுப் பேச்சுக்களை தொடர்ச்சியாக நடாத்தி முடிவுகளை மேற்கொண்டிருந்தால் தீர்மானங்கள் இன்னமும் சிறப்பானதாக அமைந்திருக்கும்.
மொழி, பிரதேசம், மதம், சாதி, பொருளாதார ஏற்றத்தாழ்வு என பல வழிகளிலும் பிளவுபட்டுள்ள இலங்கையின் சமூகங்கள் ஒவ்வொன்றினதும் உணர்வுகள் எதிர்பார்ப்புகள் நிச்சயமாக கருத்திற் கொள்ளப்பட வேண்டும். நாம் ஏற்றுக் கொள்கிறோமோ இல்லையோ வேற்றுமை என்பது தமிழ் மொழிவழிப் பிரதேசம் எங்கிலும் ஆழமாகவே உணரப்படுகின்றது. வேற்றுமையிலேயே ஒற்றுமையை தேட வேண்டியவர்களாக உள்ளோம். மொழி ரீதியான, இன ரீதியான, மத ரீதியான வட்டரங்களுக்கு இனி இடமேயில்லை என அமைப்புருவாக்கிகள் அடம்பிடிப்பது காலத்திற்கு பொருத்தமில்லாத ஒன்று.
வடக்கில் தமிழ் முஸ்லீம் சமூகங்கள் அருகருகே உள்ள பிரதேசங்களிலும், சிங்கள மக்களுடன் இணைந்த எல்லைப் பிரதேசங்களிலும் எந்தவொரு சமூகத்தினருக்கும் பாதகமற்ற வகையில் வட்டாரங்கள் உருவாக்கப்பட வேண்டும். அதேபோல கிழக்கிலும் மூவின சமூகங்களும் பாதிக்கப்படாமலும் தமிழ் மொழி பேசும் தமிழர்களினதும் முஸ்லீம்களினதும் பூர்வீக வாழ்விடங்கள் கூறுபடாமலும், ஒரு இனத்தினரின் செயற்பாடுகளால் மற்றைய இனம் சிதைக்கப்படாமலும் அவர்களது அடிப்படை உரிமைகளை களவாடப்படாமலும் இருக்கக்கூடிய வட்டாரப் பிரிப்புகள் இடம்பெற வேண்டும்.
நடைமுறையில் உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் செயற்பாடுகளின் பிரகாரம், சிறுபான்மை இனங்கள் சேர்ந்து வாழ்கின்ற வட்டாரங்கள் இரட்டை அங்கத்தவர் கொண்ட வட்டாரங்களாக்கப்பட்ட போதிலும் முடிவுகளின் பிரகாரம் அதிக வாக்குகளைப் பெறும் கட்சி அல்லது குழுவுக்கு வட்டாரத்தின் இரண்டு உறுப்பினர்களையும் வழங்கும் மிகவும் பாதகமான தீர்மானம், அவ் வட்டாரத்தில் தோல்வியுறும் இனக்குழுவின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்குகிறது. இந்த நடைமுறை மாற்றப்பட வேண்டும் என்பதை சகல தரப்புகளும் அழுத்தம் திருத்தமாக முன்வைக்க முடியும், முன்வைக்க வேண்டும். இரண்டு வெவ்வேறு சமூகங்கள் சம அளவில் வாழ்கின்ற வட்டாரங்கள் தனித்தனி வட்டாரங்களாக பிரிக்கப்பட வேண்டும், அல்லது அவ் வட்டாரம் இரண்டு உறுப்பினர்கள் கொண்ட வட்டாரமாக்கப்பட வேண்டும்.
பிரதமரால் வழங்கப்பட்டுள்ள காலக்கெடுவுக்குள் முன் வைக்கக்கூடிய பரிந்துரைகளால் இடைக்கால வரைபில் காணப்படும் பாதகமான விடயங்களை சரி செய்ய முடியுமோ இல்லையோ என்பதற்கப்பால் அதற்காக வழங்கப்பட்டுள்ள வாய்ப்பினை நாம் முழுமையாக வினத்திறனுடன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எமது மக்களின் தொடர்ச்சியான பின்னடைவுகளுக்கு காரணமான விடயங்கள் எந்த வடிவத்தில் வந்தாலும் அதனை இல்லாது செய்ய எம்மாலான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டியவர்களாகவுள்ளோம்.
முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால ஆவணம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் தாக்கத்தை செலுத்தாது என தேரத்ல் ஆணைக்குழு உறுப்பினர்கள் கூறினாலும், தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டிருந்தாலும் தமிழ்த் தேசியப் பரப்பில் செயற்படுகின்ற ஒவ்வொரு அமைப்புக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் அனைத்து வேட்பாளர்களுக்கும் எல்லை நிர்ணய முடிவுகள் பற்றிய அக்கறை, தான் சார்ந்த சமூகத்தின் பேரால் அவசியம் இருக்க வேண்டும்.
உள்ளூராட்சித் தேர்தல் அறிவித்த சூழலில் உருவான ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின், அதன் அங்கத்துவக் கட்சிகளின், அதன் உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்களின் செயற்பாடுகள் தொய்வடைந்து வருவதாக செயற்பாட்டாளர்கள் சலித்துக் கொள்ளும் நிலையை நாம் காண்கிறோம். இவ்வாறான ஒரு நிலை ஏற்கனவே எதிர்வுகூறப்பட்டு, ஒவ்வொரு வட்டாரத்திலும் அதன் வேட்பாளர்களே ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வட்டார அமைப்பாளர்களாக செயற்பட்டு அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் மட்டுமே கட்சி ஒன்றின் நடவடிக்கை அல்ல. தேர்தல் என்பது கட்சிக்கு அவசியமான ஒரு பகுதிச் செயற்பாடு. கட்சிக்கான மக்களின் அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ளும், ஆதரவை அளவிட்டுப் பார்க்கும் செயற்பாடு.
நாளாந்தம் எமது மக்கள் முகம் கொடுக்கும் நெருக்குவாரங்களின் போது அவர்களுக்கு துணையாக இருப்பதும், தீர்வைப் பெற்றுக் கொடுப்பதும் அல்லது அதற்கு முயற்சி செய்வதும் கூட கட்சிச் செயற்பாடுதான். எனவே எல்லை மீள் நிர்ணய விடயத்தில் விரைந்து செயற்படுவோம்.
19.04.2023