இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட Prednisolone கண் சொட்டு மருந்துகளை உடனடியாக பயன்பாட்டிலிருந்து நீக்குமாறு சுகாதார அமைச்சு அனைத்து வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களுக்கும் அறிவித்துள்ளது. Prednisolone கண் சொட்டு மருந்துகளை மருத்துவமனைகளுக்கு வழங்குவதும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட மூன்று நோயாளிகள் Prednisolone பயன்படுத்தியதன் பின்னர் சில சிக்கல்களை எதிர்கொண்டதையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கண் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சைகளின் பின்னர் ஒரே சந்தர்ப்பத்தில் மூன்று நோயாளர்களுக்கு தொற்று ஏற்பட்டதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
அத்துடன், அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட அனைத்து மருந்துகளும் பரிசோதனைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
48 மணித்தியாலங்களின் பின்னர் கிடைத்த அறிக்கைக்கு அமைய, நோய்த்தொற்றுக்கு காரணமான மருந்து கண்டறியப்பட்டுள்ளது.
தொற்றுக்குள்ளான நோயாளர்களுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை நிலையங்களில் கிருமிகள் இருக்கலாம் என்ற அடிப்படையில், கண் வைத்தியசாலையை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்ததாக தேசிய கண் வைத்தியசாலையின் பேச்சாளர் கூறினார்.
இதேவேளை, சர்ச்சைக்குள்ளான கண் மருந்தை பயன்படுத்துவது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பில் Prednisolone-ஐ பயன்படுத்திய ஒருவருக்கு கண்ணில் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் கூறினார்.
நுவரெலியா வைத்தியசாலையிலும் இந்த மருந்து பயன்பாட்டின் பின்னர் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.