மலையகம் – 200, இலங்கை மண்ணில் கால் பதித்த காலம் முதல், தமது அடிப்படையான வாழ்வுரிமைக்காக, கடந்த இருநூறு வருடங்களாக போராடி வரும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வரலாற்றை அலசி ஆராய்ந்து அதில் பாடங்களைக் கற்றுக் கொண்டு, நிரந்தரமான தீர்வுக்கான பாதையை உருவாக்க துடிக்கும் அடையாள வார்த்தை.

மே 01 – தொழிலாளர் தினம், கூலித் தொழிலாளர்களாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட தென் இந்தியத் தமிழர்கள் தமக்காக போராடத் தொடங்கிய பின்னர், உலகத் தொழிலாளர் சமூகம் தமது உழைப்பிற்கு எட்டு மணி நேர வரையறையை வலியுறுத்தி உலக அளவிலான போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து அதில் வெற்றி கொண்ட 1890 மே 01 ஐ நம் அனைவருக்கும் நினைவுபடுத்தும் நாள்.
இலங்கையில் ஏனைய சமூகங்களுக்கு இணையான வாழ்வுக்காக இன்னமும் போராடிக் கொண்டிருக்கின்ற மிகப் பெரிய தொழிலாளர் கூட்டத்தின் இருநூறு வருட வரலாற்றை, மலையகம் – 200 ஐ, உலகத் தொழிலாளர் தினத்துடன் இணைத்து மீட்டிப் பார்ப்பதே பொருத்தமாகும்.
19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழ்நாட்டின் தஞ்சாவூர், திருநெல்வேலி, ஏற்காடு போன்ற பகுதிகளில் வெள்ளையின ஆட்சியாளர்களால் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட உணவுப் பஞ்சம் காரணமாக அப்பகுதிகளில் உள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திய வெள்ளையின ஆட்சியாளர்களும் பிரித்தானியப் படைகளும் ஆண் தொழிலாளர்களை பலவந்தமாக இலங்கைக்கு கொண்டு வந்தார்கள். சில ஆண்டுகள் கழிந்த பின்னர் பெண் தொழிலாளர்களும் குடும்பங்களோடு இங்கு வந்தார்கள். இலங்கையில் என்ன நடக்கின்றது என்பது தெரியாமலேயே அவர்கள் இங்கு வந்து சேர்ந்தார்கள்.
இலங்கையில் இலட்சக்கணக்கான ஏக்கர் காடுகளை அழித்து கோப்பிப் பயிர்ச் செய்கையில் ஈடுபட பெருந்தொகையான தொழிலாளர்கள் தேவைப்பட்டார்கள்.
தமிழகம் சென்று ஆட்களைக் கொண்டுவருவதற்கு வெள்ளைக்காரர் தமது கைக்கூலிகளாக செயற்பட்ட சிலரை பயன்படுத்தினார்கள். அவர்களே பெரிய கங்காணிகளாகவும் நியமிக்கப்பட்டார்கள். கங்காணிகளின் கண்காணிப்பின் கீழ் தமிழகத்திலிருந்து படகுகள் மூலமாக பெரும் தொகையான தொழிலாளர்கள் இங்கு கொண்டுவரப்பட்டனர்.
இவ்வாறான ஒரு படகுப் பயணத்தில், ஆதிலட்சுமி என்ற படகு கடலில் கவிழ்ந்து சுமார் 150 பேர்வரை இறந்து போனது வரலாற்றின் ஒரு பக்கம். தலைமன்னார் வரை படகுகளில் வந்து தொடர்ந்து மாத்தளை வரை நடை பயணமாக வந்த தொழிலாளர்களில் வயதானவர்கள், நோயாளிகள் பலர் பயணத்தின் போதே இறந்து போனார்கள். வந்து சேர்ந்த பின்னரும் வாந்திபேதி, காலரா போன்ற தொற்று நோய்களினாலும் ஆயிரக்கணக்கானவர்கள் மரணிக்க நேர்ந்தது. கடல் மட்டத்திலிருந்து 3000 அடிக்கு மேற்பட்ட மலைப்பகுதியில் உள்ள காடுகளை அழித்து துப்புரவு செய்யும்போது, மலைச்சரிவுகளில் வீழ்ந்தும் மற்றும் அம்மைநோய் காலரா போன்ற நோய்களினாலும் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 70,000 பேர் வரையிலும் இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
மலைநாட்டில் நெடுஞ்சாலைகள், சுரங்கப்பாதைகள் அமைக்கும் பணிகளில் இத் தொழிலாளர்களே அமர்த்தப்பட்டிருந்தனர். சிங்கமலை சுரங்கப்பாதையை தோண்டியவர்களில் ஒருவர் தனது மகேந்திரன் எனும் பெயரை அங்கு அன்றே குறித்து வைத்துள்ளதைக் காணலாம்.
அக்காலப்பகுதியில், தமிழ்த் தொழிலாளர்களின் வேலைத் தளங்களுக்கு அண்மித்த கிராமங்களில் இருந்த சிங்கள மக்கள் எவ்வித ஒத்துழைப்பையும் வழங்கியிருக்கவில்லை.
ஆரம்பத்தில் அழைத்து வரப்பட்ட தொழிலாளர்கள், ஆதிவாசிகளை போல், மரக் கிளைகளால் அமைக்கப்பட்ட குடிசைகளில் தங்கிக் கொண்டு தமது தொழிலைச் செய்து வந்தனர். தமது குழந்தைகளை மரக் கிளைகளில் தொட்டில் கட்டி உறங்க விட்டு தொழில் செய்து வந்தனர்.
அக்காலத்தில் எந்தளவு பேர் தமிழகத்திலிருந்து இங்கு அழைத்து வரப்பட்டார்கள் எனும் தரவுகள் தோட்ட நிர்வாகத்திடம் இருந்தது. அவர்களில் எவரும் திரும்பிப் போகாத நிலையில், கடுமையான வேலைத் தளங்களிலும் நோய்கள் காரணமாகவும் எவ்வளவு பேர் இறந்து போனார்கள் என்பது மட்டும் கணக்கிடப்படவில்லை.
பிரித்தானியப் படையினரே தோட்டங்களை நிர்வகித்து வந்ததனால் தொழிலாளர்களால் படையினரின் கெடுபிடிக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. நோயாளர்கள், முதியவர்கள் தோட்டங்களை விட்டு துரத்தியடிக்கப்பட்டார்கள். பலர் கண்டிப் பகுதியின் நடைபாதைகளில் இறந்து கிடந்தார்கள். பிணங்கள் பள்ளங்களில் தூக்கி எறியப்பட்டன. பின்னர் தோட்ட நிர்வாக செலவில் அவை புதைக்கப்பட்டன. 1850 கள் இறப்புவீதம் கூடிய காலமாக இருந்தது. ஆனாலும், இறப்பு வீதம் மூன்று மட்டுமே என துரைமார் சங்கத் தலைவர் டைட்லர் தெரிவித்திருந்தார்.
அக் காலம் பெருந்தோட்ட பயிர்ச்செய்கையின் சிறப்பான காலமாக கருதப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்திலிருந்து மீண்டும் தொழிலாளர்களை கொண்டுவரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது, வெள்ளைக்கார துரைமார்கள் செய்த அக்கிரமங்கள் மற்றும் பெரிய கங்காணிமாரின் மோசடிகள் என்பவற்றால் தொழிலாளர்கள் இங்கு வர பயந்தனர்.
அதேநேரத்தில் அவர்கள் மொரிசியஸ் தீவுக்கு செல்ல ஆர்வம் காட்டினர். அக்காலப் பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பலர் தென்னாபிரிக்க நாடுகள், மொறீசியஸ், மலேசியா போன்ற நாடுகளுக்கும் தொழிலாளர்களாக அனுப்பப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான சூழலில் ‘ஆபத்தில் உதவும் நண்பன்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அவ் அமைப்புக்கு பிரித்தானிய படையினரே தலைமை தாங்கினர். இவ் அமைப்புக்கான பணம் வெள்ளையர் அரசினால் வழங்கப்பட்டது.
முதலில் 40 பவுண்ஸ், பின்னர் 600 பவுண்ஸ் வரையும் வழங்கப்பட்டது. நாளாக 1700 பவுண்ஸ் வரையிலும் வழங்கப்பட்டது. பெரிய கங்காணிமார் மூலமாக தமிழகத்திலிருந்து தமிழர்கள், இங்கு எல்லாமே இலவசமாக கிடைப்பதாக கூறப்பட்டு ஏமாற்றி அழைத்துவரப்பட்டனர். தமிழகம் சென்றுவரும் பாதிசெலவை தோட்ட நிர்வாகங்களே ஏற்றுக் கொண்டது. இக்காலத்திலேயே ‘லயம்’ என்ற குடிசைத் தொடர் அமைத்துக் கொடுக்கப்பட்டது.
1903 வரை தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்வி நிலை பற்றிய எவ்வித அக்கறையும் காட்டப்படவில்லை. பிரித்தானிய நாடாளுமன்றில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய பின்னரே இங்கு தோட்டத் தொழிலாளர்களுக்கு கல்விக்கான வசதி ஏற்படுத்தப்பட்டது. தொழிலாளர்களுடன் செல்லும் பிள்ளைகள் பக்கத்தில் உள்ள தேயிலை இலைகளை பிடுங்கி விடுவார்களானால் தேயிலை செடிகள் பாதிக்கப்படும் என்ற காரணமும் கல்வி வசதியை ஏற்படுத்த உந்துதலாக அமைந்தது என்றும் சொல்லப்படுகிறது.
அதுவரை தோட்டங்களுக்கு தேவையான உரம் களஞ்சியப்படுத்தப்பட்ட இடங்களே (உரக் காம்பரா) பாடசாலைகளாக மாறின. இலங்கையின் வடபகுதியிலிருந்து ஆசிரியர்கள் அழைத்துவரப்பட்டனர். அவர்கள் பகல் 12மணிவரை ஆசிரியர்களாகவும் மாலை 5மணிவரை தோட்டங்களின் குமாஸ்தாக்களாகவும் பணிபுரிந்தனர்.
தோட்டங்களில் ஆரம்ப கல்வி மட்டுமே வழங்கப்பட்டது. 12 வயதுக்கு பின்னர் நகர பாடசாலைக்கு செல்ல முடியவில்லை. தோட்ட உத்தியோகத்தர்களின் பிள்ளைகள் மட்டுமே நகர பாடசாலைக்கு சென்று கல்வி கற்று வந்தனர். தொழிலாளிகளின் பிள்ளைகள் தேயிலை செடிகளிலிடையே கல் பொறுக்குதல், புல்வெட்டுதல், நாற்று மேடைகளுக்கு பைகளில் மண் நிரப்புதல் போன்ற வேலைகளுக்கு அமர்த்தப்பட்டார்கள்.
கடல் மட்டத்திலிருந்து 3000 அடி அளவுக்கு கீழ் வாழ்ந்த சிங்கள விவசாயிகளின் நிலங்களும் வெள்ளையர்களால் பறிக்கப்பட்டன. அவற்றில் இரப்பர், தென்னை போன்றவை பயிர் செய்யப்பட்டன. இருந்தும், சிங்கள விவசாயிகள் வெள்ளையர்களை விட தோட்டத் தொழிலாளர்கள் மீதே கோபம் கொண்டிருந்தனர். இதன் விளைவாக 1946 ஆம் ஆண்டு கேகாலை பகுதியில் உள்ள உருளவள்ளி தோட்டத்தில் இருந்த தொழிலாளர்கள் தோட்டத்தை விட்டு துரத்தியடிக்கப்பட்டனர். இதன்போது தொழிலாளர்கள் நடத்திய போராட்டமும் அவர்கள் தொடுத்த வழக்கும் தோல்வியில் முடிவடைந்ததை தொடர்ந்து தொழிலாளர்கள் முற்றாக அங்கிருந்து வெளியேறினார்கள்.
அக்காலத்திலேயே சம்பள உயர்வுக்காக தொழிலாளர் நடாத்திய போராட்டத்தில் முல்லோயா இ. கோவிந்தன் என்ற தொழிலாளி சுட்டுக் கொல்லப்பட்டார். 1972 ஆண்டு வரை பிரித்தானியக் கம்பனிகளே தோட்டங்களை நிர்வகித்து வந்தன. அக்காலப்பகுதியில் நாவலப்பிட்டி பார்வதி அம்மா உட்பட மூன்று தொழிலாளர்கள் போராட்டங்களின் போது சுட்டுக் கொல்லப்பட்டனர். உடபுசல்லாவ பகுதியில் கொம்பாடி என்ற தொழிலாளியும் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.
தனியார் தோட்டங்களிலும் துப்பாக்கிச்சூடுகள் நடத்தப்பட்டன. இதன்போது பிரபல தொழிற்சங்கவாதியின் மருமகனுக்குச் சொந்தமான கோம்பர தோட்டத்தில் (கண்டி மாவட்டம்) 16பேர் காயமடைந்தனர். EPF (ஊழியர் சேமலாப நிதி) கேட்டே இப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
தொழிற்சங்கங்களே போராட்டத்தை நடாத்தின. பல தோட்டங்களுக்கு சொந்தக்காரரான முதலாளிமார்கள்தான் தொழிலாளர் உரிமைக்காக போராடும் தலைவர்கள் என்றும் காண்பிக்கப்பட்டார்கள். இங்கு சுட்டிக்காட்ட வேண்டிய விடயம் யாதெனில் இலங்கையில் தோட்டங்களின் முதலாளிமாரே தொழிற்சங்கங்களுக்கும் தலைமை தாங்குகிறார்கள் என்பதாகும்.
1964ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சிறீமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் தொழிலாளர்கள் தாய் வேறாகவும் பிள்ளை வேறாகவும் பிரிக்கப்பட்டு இலங்கையில் இருந்து ஒரு பகுதியினர் இந்தியாவுக்கு செல்லும் நிலை வந்த போதும் அரசுத் தலைவர்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்த தோட்டத் தொழிலாளர்களின் தலைவர்கள் அதனைத் தடுத்து நிறுத்த முயற்சிக்கவில்லை என்றும் குற்றச் சாட்டுகள் இருந்தன.
அதேநேரத்தில் 1972ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட காணி சீர்திருத்த சட்டத்தின் கீழ் அத் தலைவர்களின் காணிகளும் தேசியமயமாக்கப்பட்டன. 1973ஆம் ஆண்டு ஏற்பட்ட உணவுப் பஞ்சம் பெருந்தோட்ட தொழிலாளர்களை பிச்சைக்காரர்களாக மாற்றியது. இதன் விளைவு 1977 தேர்தலில் ஜே.ஆர் தலைமையிலான ஐ.தே.கட்சி மலையகத்தில் பெருமளவு ஆதரவைப் பெற்றுக் கொண்டது.
ஆனாலும், 1979, 1981, 1983 களில் ஏற்பட்ட இன வன்செயல்களில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட உயிர் மற்றும் சொத்தழிவுகள் எண்ணிலடங்காதவை.
1984ஆம் ஆண்டு தமிழ்ப் போராளிகளின், அரசுடனான திம்புப் பேச்சுவார்த்தைகளில் மலையக மக்களின் பிரச்சினை பற்றி பேச்சுவார்த்தை நடாத்தியதன் விளைவு, நாடற்றவர்கள் 94,000 பேருக்கு பிரஜாவுரிமை வழங்கப்பட்டது. காலை 10 மணிக்கு கோவில் பூசை நடாத்தியதன் பின்னர் 12மணிக்கு பிரஜாவுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனை அகிம்சை ரீதியில் கேட்கும் உரிமைகளை கொடுப்பதற்கு தான் எப்போதும் தயார் என ஜே.ஆர் ஜெயவர்த்தனா உலகுக்கு காட்டிக் கொண்டார்.
ஜே.ஆர் அரசினால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம் அனைத்து தமிழ் பேசும் மக்களையும் பாதிக்கும் என்று தெரிந்திருந்தும் மலையக மக்கள் சார்ந்த நாடாளுமன்றப் பிரதிநிதிகள் அச் சட்டத்தை ஆதரித்திருந்தமை தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர்களை அதிர்ச்சியும் கவலையும் கொள்ள வைத்திருந்தது.
1983 பின்னர் வடகிழக்கு போராட்ட இயக்கங்களுடன் மலையக இளைஞர்கள் சிலர் இணையும் சூழல் ஏற்பட்ட பின்னரே அங்குள்ள இளைஞர் யுவதிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன. கூடவே தோட்டத்தில் உள்ள காரியாலயங்கள் மற்றும் தேயிலை தொழிற்சாலைகளில் சாதாரண வேலைகளும் வழங்கப்பட்டன.
1994ம் ஆண்டு நடந்த தேர்தலில் மலையக மக்களின் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மூலம் ஏழு பேர்ச்சஸ் நிலமும் கடன் அடிப்படையில் வீடு கட்டுவதற்கான நிதியும் கிடைத்தது.
தற்போது இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியில் வீடுகள் வழங்கப்பட்டாலும் வீடுகள் அமைந்துள்ள காணிகளுக்கு உறுதிப்பத்திரம் வழங்கப்படவில்லை. 14 மாவட்டங்களில் மலையக மக்கள் வாழ்ந்து வந்தாலும் நுவரெலியா மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் லயத்து வீட்டில் வாழ்ந்தாலும் அங்குள்ள லயங்களை சுற்றி உள்ள நிலங்கள் காணி உறுதிப் பத்திரத்துடன் பெரும்பான்மை இனத்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நடைபாதையில் நடப்பதற்குக் கூட நில சொந்தக்காரர்களின் அனுமதி பெறவேண்டிய நிலையிலேயே மலையக மக்கள் தற்போதும் உள்ளனர்.
கொரோனா காலங்களில் கூட தோட்டங்களில் ஒருபோதும் வேலை நிறுத்தப்படாமல் தொழிலாளர்கள் தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருந்தபோதிலும் இப்போது 300 மில்லியனாக உள்ள நாட்டின் வருமானத்தில் 150 மில்லியன்களை தேடிக் கொடுப்பது பெருந்தோட்டத்துறை என்பதை அரசோ அமைச்சர்களோ எங்கும் குறிப்பிடுவதில்லை. அந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது பற்றியும் கவனத்தில் கொள்ளப்படவில்லை.
1. வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் நடாத்தப்பட்டதை விட மோசமான முறையில் தோட்டத் தொழிலாளர்கள் அடக்கி ஒடுக்கப்படும் நிலைமை மாற வேண்டும்.
2. பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அவர்கள் தொழில் செய்யும் இடத்தில் நிலமும் வீடும் வழங்கப்படல் வேண்டும். குடிநீர் வசதியும் செய்து கொடுக்கப்படல் வேண்டும்.
3. தொழிலாளர்கள் 60 வயதுவரை தொழில் செய்யலாம் என்கிறபோதிலும் தோட்டம் நட்டத்தில் இயங்குவதாக காரணம் சொல்லி இள வயதிலேயே ஓய்வூதியம் கொடுத்து, 1400 தேயிலைச் செடியும் கொடுத்து, அதில் பறிக்கப்படும் கொழுந்தை குறைந்த விலைக்கு பெற்று பணம் கொடுக்கும் முறை நிறுத்தப்படல் வேண்டும். நட்டம் என வெளியாருக்கு நிலங்களை குத்தகைக்கு கொடுத்துவிட்டு தொழிலாளர்களை தினக்கூலிகளாக மாற்றும் முறையும் நிறுத்தப்படல் வேண்டும்.
4. தோட்டங்களுக்கு வெளியில் தொழில் செய்யும், தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு அவர்கள் பிறந்து வளர்ந்த இடத்தில் வீடு வழங்கும் உரிமை வழங்கப்பட வேண்டும்.
5. தரிசு நிலங்களில் தொழிலாளர்களுக்கு 20 பேச்ர்சஸ் நிலம் வழங்கப்பட வேண்டும்.
6. கிராம மக்களின் செயற்பாடுகள் யாவும் தோட்ட நிர்வாக அதிகாரியின் கீழ அல்லாமல் பிரதேச செயலக நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்படவேண்டும்.
7. தொழில் செய்யும் இடங்கள் தவிர்ந்த ஏனைய இடங்களில் தோட்ட துரைமாரின் தலையீடுகள் நிறுத்தப்பட வேண்டும்.
8. தொழிலாளர்கள் அங்கம் வகிக்கும் தொழிற்சங்கங்களுக்கு வாக்களிக்கும் முறையை தவிர்த்து தாம் விரும்பிய கட்சிகளுக்கும் வாக்களிக்கும் அரசியல் உரிமை உறுதி செய்யப்பட வேண்டும்.
9. சகல அரச திணைக்களங்களிலும் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு விகிதாசார அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும்.
10. தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தேயிலைத் தூளானது 04ம் தர டஸ்ட் அல்லாமல் 2ம் தர தேயிலைத் தூளாக வழங்கப்பட வேண்டும்.
26.04.2023
(நன்றி – குமாரசாமி கமலநாதன் – சென்ற் ஜோன்ஸ், கந்தப்பளை)