இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொடவை கறுப்புப் பட்டியலில் இணைப்பதற்கு அமெரிக்கா எடுத்த தீர்மானம் கவலையளிப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கை வௌிவிவகார அமைச்சினால் கவலை வௌியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த தீர்மானத்தினால் ஆழ்ந்த கவலையடைவதாக அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிடம், வௌிவிவகார அமைச்சர் அலி ஷப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நீண்டகால இருதரப்பு பங்காளர் என்ற வகையில், உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் அமெரிக்கா மேற்கொண்ட ஒருதலைப்பட்சமான நடவடிக்கையானது, தேசிய ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு இலங்கை எடுத்துள்ள முழுமையான அணுகுமுறைக்கு பாதகமாக அமையுமென வெளிவிவகார அமைச்சின்  அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் ஜனநாயக ஆட்சி மற்றும் நல்லிணக்கக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதில் அரசு மேற்கொண்டுள்ள உறுதியான முன்னேற்றத்தின் பின்னணியில் இந்த அறிவிப்பானது  துரதிர்ஷ்டவசமானது எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறான சவால்களுக்கு மத்தியிலும் நல்லிணக்கம், பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் மற்றும் சமூக-பொருளாதார மேம்பாட்டை அடைவதற்கான இலங்கையின் முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என வௌிவிவகார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.