வவுனியா – வெடுக்குநாறி மலையில் மீண்டும் விக்கிரகங்கள் இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டன. ஆலய நிர்வாகத்தினர், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டிருந்தனர். மாவட்ட தொல்பொருள் திணைக்களத்தினரும் நெடுங்கேணி பொலிஸாரும் வெடுக்குநாறி மலைக்கு சென்றிருந்தனர். சிவலிங்கம், அம்மன், முருகன், பிள்ளையார், வைரவர், நாகதம்பிரான் உள்ளிட்ட விக்கிரகங்கள் இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டன.

வெடுக்குநாறி மலையில் வழிபாடுகளை மேற்கொள்ள பக்தர்கள் செல்வதைத் தடுக்கும் வகையில், எந்தவொரு அரச அதிகாரியும் செயற்படக்கூடாது என வவுனியா நீதவான் நீதிமன்றம் கடந்த 24 ஆம் திகதி உத்தரவிட்டது.

வெடுக்குநாறி  மலையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட  சிலைகளை மீண்டும் அங்கு பிரதிஷ்டை செய்யுமாறும் நீதிமன்றம் நேற்று (27)  உத்தரவிட்டது.

தொல்லியல் திணைக்களத்தின் மேற்பார்வையுடன் விக்கிரகங்கள் மீள பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும் என இதன்போது நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம் 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.