தலைவர்,
எல்லை மீள் நிர்ணய ஆணைக்குழு
நில அளவையாளர் நாயக அலுவலகம்
த. பெ. இல. 506
கொழும்பு. 05
மதிப்பிற்குரிய தலைவர் அவர்களுக்கு,

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின், வவுனியா மாவட்ட வரைபுகள் சம்பந்தமான பரிந்துரைகள்
மேற்படி வரைபுகள் சம்பந்தமான கடந்த கால அமர்வுகளின் போது, எமது மாவட்டத்திலுள்ள மக்கள் பிரதிநிதிகள் (பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள்) மற்றும் பெரும்பாலான கிராம, நகர்ப்புற சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்மையை நாம் கண்டிக்கிறோம்.
மேலும், புதிய தொகுதிப் பங்கீட்டின் போது அரசாங்க உயர்மட்ட அறிவித்தலுக்கு அமைவாக, அங்கத்தவர்களின் எண்ணிக்கையை குறைப்பதிலும் வாக்காளர் எண்ணிக்கையை சமநிலைப்படுத்துவதிலுமே ஆர்வம் காட்டப்பட்டுளாதேயொழிய வட்டாரங்களின் நிலத்தொடர்பின்மையால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
இயன்றளவு விரைவாக, எமது பரிந்துரைகளை நேரில் சமர்ப்பித்து விளக்கங்களை வழங்க சந்தர்ப்பம் ஒன்றை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
பொதுவான பரிந்துரைகள் –
அ) குறித்த உள்ளூராட்சி மன்றத்திற்கு தெரிவாகும் மொத்த உறுப்பினர்களில், வட்டார உறுப்பினர்களுக்கும் மேலதிகப் பட்டியல் உறுப்பினர்களுக்குமான விகிதம் 60:40 என்பதாக அமைய வேண்டும்.
ஆ) தற்போதைய உள்ளூராட்சித் தேர்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு (65 (அ) ஆவது பிரிவு), “பல் அங்கத்தவர் வட்டாரத்தில் அதிக வாக்குகளைப் பெறுகின்ற கட்சி அல்லது சுயேச்சைக் குழுவினால் பெயர் குறிக்கப்பட்ட இருவரோ அல்லது மூவரோ அவ் வட்டாரத்தின் உறுப்பினர்களாக பெயர் குறிக்கப்படுவர் “ எனக் கொள்ளுதல் அவ் வட்டாரத்தின் சிறுபான்மை சமூகங்களின் சமூக, அரசியல் உரிமைகளை முழுமையாக நிராகரிப்பதாக உள்ளது.
விகிதாசார தேர்தல் முறைக்கு முற்பட்ட தொகுதி அடிப்படையிலான தேர்தல் முறையில் பல் அங்கத்தவர் முறைமை என்பது குறிப்பிட்ட தொகுதியில் வாழ்ந்த அனைத்து சிறுபான்மை சமூகங்களினதும் உரிமைகளை பாதுகாக்க வழி செய்தது என்பதை நினைவூட்ட விரும்புகிறோம்.
வவுனியா மாவட்டத்திற்குரிய பரிந்துரைகள் –
வவுனியா வடக்கு பிரதேச சபை –
அ) வவுனியா வடக்கு பிரதேச சபையின் நிர்வாகத்திற்கு உட்படாத பல கிராமங்கள் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் விருப்பத்திற்கு மாறாக வேண்டுமென்றே இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதால் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை வேண்டுமென்றே திட்டமிட்டு அரசு ஏற்படுத்துகின்றது என்ற முடிவுக்கே நாம் வரவேண்டியுள்ளது.
உதாரணம்: வட்டாரம் 6 – எத்தாவெட்டுனுவெவ
வட்டாரம் 07 – போகஸ்வெவ
ஆ) தமிழ் மக்கள் வாழும் கிராமமான வெடிவைத்தகல்லு (221 A)
நிக்கவெவ தெற்கு கிராம சேவையாளர் பிரிவுடன் இணைக்கப்பட்டு போகஸ்வெவ வட்டாரத்துடன் வலுக்கட்டாயமாகச சேர்க்கப்பட்டுள்ளது.
இ) தமிழ் மக்கள் வாழும் கிராமமான வெடிவைத்தகல்லு (221A) மிக அருகில் இருக்கக்கூடிய வட்டாரம் 05 பட்டிக்குடியிருப்புடன் இணைந்திருக்க வேண்டியதை (மருதோடை, ஊஞ்சல்கட்டி, கற்குளம், ஒலுமடு) திட்டமிட்ட முறையில் போகஸ்வெவ உடன் இணைத்தது மிகப் பிழையான செயற்பாடாகும்.
14.07.2017ல் நடைபெற்ற வவுனியா வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவின் ஆளுகைக்கு உட்படாத வாக்காளர்களை இப்பகுதியில் வாக்காளர் பதிவில் இணைக்க முடியாது என்று தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் 80 கிலோமீற்றர் தொலைவில் வசிக்கும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் தனது பிரதேசத்தை அநுராதபுரத்துடன் இணைக்கும்படி வேண்டிக் கொண்டார். (இப் பதிவுகள் அடங்கிய கூட்ட அறிக்கையின் பிரதி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது).
செட்டிக்குளம் பிரதேச சபை –
அ) வட்டார இல 06 சின்னச்சிப்பிக்குளம் வட்டாரம் இரண்டாக்கப்பட்டு முதலியார்குளம் கிராம சேவையாளர் பிரிவு தனி வட்டாரமாக்கப்பட வேண்டும் அல்லது செட்டிகுளம் வட்டாரம் 03 உடன் இணைத்தல் வேண்டும் அல்லது சின்னசிப்பிக்குளம் வட்டாரம் இரட்டை அங்கத்தவர் வட்டாரமாக்கப்பட வேண்டும்.
ஆ) பாவற்குளம் வட்டார இல 03 இலிருந்து பாவற்குளம் 04 (208D), 05, 06 (208C) யூனிற் பகுதி கிராம சேவையாளர் பிரிவுகளை நீக்கி கந்தசாமிநகர் (208B) கிராம சேவையாளர் பிரிவு (தட்டான்குளம்), கங்கன்குளம் கிராம சேவையாளர் பிரிவுகளுடன் இணைத்து ஒரு வட்டாரத்தை அதிகரிப்பதன் மூலம் நிவர்த்தி செய்யப்படல் வேண்டும்.
மேலும், பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு கிராமங்களின் பெயர்களைத் தவிர்த்து வட்டாரத்தின் பெயர்களை மாற்றுவதன் மூலம் கிராமங்கள் மற்றும் சமூகங்களுக்கிடையில் வெறுப்பு மற்றும் அமைதியின்மையை ஏற்படுத்தும் செயற்பாடுகளை இடைநிறுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.
உதாரணம் –
1.​கோயில்குளம், கோவில்புதுக்குளம் ஆகிய கிராமங்களை வவுனியா நகரம் மற்றும் மூன்று முறிப்பு ஆகியவற்றுடன் இணைத்து பெயரிட்டமை.
2.​குளவிசுட்டான் கிராமத்தை என்பதை மாறாஇலுப்பையுடன் இணைத்து மாராயிலுப்பை என்று மாற்றியது.
3.​எத்தாவெட்டுனுவெவ, போகஸ்வெவ இவைகளை வவுனியா வடக்கு பிரதேச சபையுடன் இணைத்தமை.
4.​சேமமடு வட்டாரத்தை மருதங்குளம் என பெயர் மாற்றியது.
5.​வைரவபுளியங்குளம் கிராமம் நகரசபை எல்லைக்குள் நீண்டகாலமாக இருக்கும்போது தற்பொழுது வவுனியா தெற்கு தமிழ் பிரிவிற்குள் ஒரு பகுதியாக இணைத்திருப்பதும் குழப்பங்களை ஏற்படுத்துவதாக அமைகின்றது.
வே. குகதாசன்
வவுனியா மாவட்ட அமைப்பாளர்
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)
24.04.2023.
பிரதி: அரசாங்க அதிபர்
பிரதேச செயலாளர்கள்