இலங்கையிலுள்ள  அனைத்து சமூகங்களுக்கும் நன்மை பயக்கும் கொள்கைகளுக்கு அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு  இருப்பதாகவும் நாட்டின் நீண்டகாலமாக நீடிக்கும்  இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இந்த ஆண்டு உடன்பாடு எட்ட  எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது தொழிலாளர் தின  உரையின் போது தெரிவித்தார் தனது முயற்சி அரசியலன்றி   நாட்டின் பொருளாதாரத்தை சரியாக நிர்வகித்து   மக்கள் மீதான சுமையை குறைப்பதே என்றும்  நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான பலம்  தனக்கு  இருப்பதாகவும்  அதற்காக ஒத்துழைக்கும் அமைச்சர்களுடன் இணைந்து செயற்பட முடியும் என்ற நம்பிக்கையினால் தான்  ஜனாதிபதி பதவியை ஏற்றுக்கொண்டதாகவும்  ஜனாதிபதி தனது மே தின உரையில் குறிப்பிட்டார் .

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம், கொழும்பு, சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெற்று வருகின்றது. சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், சுதந்திரம் அடைந்து நூற்றாண்டை அடையும் 2048 ஆகும்   போது இந்தியா 2047 இலும் சீனா 2049 இலும் சாதிக்க எதிர்பார்ப்பது போன்று அபிவிருத்தியடைந்த பொருளாதாரம் கொண்ட நாடாக   மாறுவதே இலங்கையின் இலக்காக இருக்க வேண்டும் எனவும் “2048 இலங்கைக்கு அபிவிருத்திக்கான ஆண்டாகும் என்பதோடு   தற்போதைய சந்ததியினருக்காக மட்டுமல்லாது எதிர்கால இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்காகவும்  தான் இந்த  நாட்டை  கட்டியெழுப்புகிறோம். என்றார்.