பாராளுமன்ற பொது நிதிக்குழுவின் தலைவர் பதவியை நிரந்தரமாக ஒருவருக்கு வழங்காமல், தற்காலிகமாக ஒருவருக்கு வழங்குவது தொடர்பில் சர்வதேச பாராளுமன்ற சங்கத்திற்கு அறிவிக்கவுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். நேற்று (04) நடைபெற்ற தெரிவுக்குழு கூட்டத்தின் போது, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பாராளுமன்ற நிதிக்குழுவின் தற்காலிகத் தலைவராக நியமிக்கப்பட்டதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கூறினார்.

நாட்டு மக்களின் பணத்தைக் கையாளும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கே வழங்கப்பட்டுள்ளது. மக்களின் நிதியை செலவு செய்வது, வரி விதிப்பது தொடர்பான தீர்மானத்தை பாராளுமன்றமே எடுக்கின்றது.

நிதியை சரியாக செலவு செய்கின்றார்களா, நாட்டின் இலக்கை அடைந்துகொள்வதற்கு செயற்பட்டார்களா என்பதை அறிந்துகொள்வதும் பாராளுமன்றத்திற்குள்ள பொறுப்பாகும். பாராளுமன்றத்தில் உள்ள தெரிவுக்குழுக்கள் ஊடாகவே அவை இடம்பெறுகின்றன. அதில் பொது நிதிக்குழு முக்கியம் பெறுகின்றது.

ஏனைய பாராளுமன்ற தெரிவுக்குழுக்களைப் போன்று பாராளுமன்ற உறுப்பினர்களே இந்த குழுவின் உறுப்பினர்களாவர்.

அவர்களில் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பில் போதிய அறிவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அதன் தலைவராக நியமிக்கப்படுவது சம்பிரதாயபூர்வமான விடயமாகும்.

கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் திகதி பாராளுமன்ற நடவடிக்கைகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போது, பாராளுமன்ற பொது நிதிக்குழுவின் தலைவராக கலாநிதி ஹர்ஷ டி சில்வாவே செயற்பட்டார்.

அதன்போது, பல முக்கிய நிறுவனங்கள் தொடர்பிலான விவகாரங்கள் பொது நிதிக்குழுவிலும் COPE குழுவிலும் கலந்துரையாடப்பட்ட வண்ணம் இருந்தன.

பாராளுமன்ற நடவடிக்கைகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் அந்த தெரிவுக்குழுக்கள் கலைந்தன. 

எதிர்க்கட்சியின் பலத்த எதிர்ப்பிற்கு மத்தியில் பல சந்தர்ப்பங்களில் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன பொது நிதிக்குழுவின் பதில் தலைவராக நியமிக்கப்பட்டு, பல நிதிச்சட்டங்களை நிறைவேற்றிக்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

பின்னர் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான மயந்த திசாநாயக்கவின் பெயரை முன்மொழிந்து நிறைவேற்றியதுடன், ஆரம்பத்தில் அந்த பதவியை ஏற்றுக்கொண்ட மயந்த திசாநாயக்க பின்னர் இராஜினாமா செய்தார்.

அதன்படி, எதிர்க்கட்சியிலிருந்து கலாநிதி ஹர்ஷ டி சில்வாவே இதன் தலைவர் பதவிக்கு பிரேரிக்கப்பட்டிருந்த போதிலும் இதுவரை அந்த நியமனம் வழங்கப்படவில்லை.

இந்த சூழ்நிலையிலேயே பாராளுமன்ற  உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்திற்கு குழுவின் உறுப்பினரான சட்டத்தரணி சந்திம வீரக்கொடி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதேவேளை, பொது நிதிக்குழுவிற்கு நிலையான தலைவர் ஒருவர் நியமிக்கப்படாமை தொடர்பில் அந்தக் குழுவின் முன்னாள் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா ட்விட்டர் பதிவொன்றை இட்டுள்ளார்.

நான்காவது தடவையாகவும் இந்த நியமனம் பிற்போடப்பட்டுள்ளமையானது வெட்கக்கேடான விடயம் என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.