ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்பது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிப்புடன் உருவான தமிழ் அரசியல் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த கட்சிகளிடையே நீண்டகாலமாக நிலவி வந்த முரண்பாடுகளினால் உருவான புதிய அணி, நியாயப்படுத்தலுக்கு அப்பாற்பட்ட இணக்க அரசியல் காரணமாக கூட்டமைப்பின் மீது தமிழ் மக்களின் அதிருப்தி அதிகரித்திருந்த நிலையில் புதிய தலைமைத்துவத்தை வழங்கவென புதிய திசையில் அரசியல் பயணத்தை முன்னெடுக்க ஆயத்தமான அணி எனப் பல பரிமாணங்களைக் கொண்டிருந்தும், பெருமளவு தொழிலாளர் படையை கொண்டுள்ள தமிழர் தாயகத்தில் தொழிலாளர் தினத்தை குறிக்கும் செயற்பாடுகள் எதனையும் முன்னெடுத்திருக்கவில்லை.

இவ்வாறான நிலை ஏன் ஏற்பட்டது? ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் அடிமட்டத் தொண்டர்கள், ஆதரவாளர்கள் முதல் அரசியல் ஆர்வலர்கள் வரை அனைவரும் கேட்கின்ற கேள்வி இது.
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளைப் பொறுத்தவரையிலும் ஜனநாயகப் போராளிகள் கட்சியைத் தவிர்ந்த ஏனைய அனைத்து அமைப்புகளும் வெகுஜனப் போராட்ட அனுபவங்களை நீண்டகாலமாக கொண்டவை. புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற அமைப்புகள் ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பகாலங்களில் இருந்தே வெகுஜனப் போராட்டங்களையும் அவ்வப்போது முன்னெடுத்து வந்திருந்தன. வெகுஜனப் போராட்டங்களையும் பேரணிகளையும் பொதுக் கூட்டங்களையும் நடாத்தக்கூடிய கட்டமைப்புகளைக் கொண்டிருந்தன. தொழிற்சங்க அமைப்புகள், மகளிர் அமைப்புகள், மாணவர் அமைப்புகள் எனப் பல்வேறு அணிகளாக தாயக மக்களை ஒழுங்குபடுத்தி ஒன்றிணைத்து வைத்திருந்தன.
புளொட் அமைப்பைப் பொறுத்தவரையிலும் தொழிற்சங்க அமைப்புக்குள்ளேயே, கடற்தொழில், விவசாயம், தென்னை, பனை சார்ந்த ஒவ்வொரு துறைகளிலும் பல உட்பிரிவுகளைச் செயற்படுத்தி மக்கள் ஆதரவினை பெரும்படையாக, அரசியல் பலமாக உருவாக்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பரந்த அனுபவங்களைக் கொண்டிருக்கக்கூடிய கட்சிகள் கூட்டிணைத்து உருவான ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியால் தொழிலாளர் தினம் சார்ந்து எதுவித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லையெனின் அதன் காரணத்தை பாரபபட்சமற்ற முறையில் சுய விமர்சனத்திற்குட்படுத்துவது அவசியம்.
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி ஆரம்பிக்கப்பட்டபோது வெளிப்பட்ட ஆர்வம், வேகம், நம்பிக்கைகள் யாவும் குறைவடைவதைப் போன்ற தோற்றம் உருப்பெருத்து வருகிறது. ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் தலைமைச் செயற்குழு இன்னமும் முழுமையான வடிவம் பெறவில்லை. அமைப்பின் பணிகள் பொருத்தமானவர்களிடம் முறைப்படி பகிர்ந்தளிக்கப்படவில்லை. கூட்டணிக்கான நிரந்தரமான நிதிமூலங்களும் நிதி முகாமைத்துவக் கட்டமைப்பும் இன்னமும் உருவாக்கப்படவில்லை.
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியானது தனக்கென ஒரு பொருளாதார கட்டமைப்பையும், நிதி முகாமைத்துவத்தையும் உருவாக்கிக் கொள்ள முன்பே, அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சித் தேர்தல் கூட்டணிக் கட்சிகளிடமிருந்த சொந்த நிதி வளங்களை கணிசமானளவு சுருக்கிவிட்டது.
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வட்டார வேட்பாளர்கள் தத்தமது வட்டாரங்களின் அமைப்பாளர்களாக செயற்படுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளபோதும் அவ்வாறான ஒரு அடிமட்டக் கட்டமைப்பு இன்னமும் சீராக செயற்பட ஆரம்பிக்கவில்லை. ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் பிரதேசக் கிளைகளோ, மாவட்டக் கிளைகளோ இன்னமும் நிறுவப்படவில்லை.
இவ்வாறான ஒரு நிலைமையில் கூட்டணியின் பலத்தை முழுமையாக வெளிப்படுத்தக்கூடிய வகையில் தொழிலாளர் தினச் செயற்பாடுகளை முன்னெடுப்பது கடினமான காரியம்.
மக்கள் விடுதலை முன்னணியை பிரதான அணியாகக் கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் பிரச்சார யுக்திகளையும் மிக விரைவான அணிதிரட்டலையும் வியந்து பார்க்கும் நாம், அவ் அணி, இந்த நிலையை அடைவதற்கு முன்னெடுத்திருந்த நீண்டகால வேலைத்திட்டங்கள் பற்றி புரிந்து கொள்வதில்லை.
தலைமைக்குழுவின் தீர்மானங்கள் அடிமட்டத் தொண்டர்கள், செயற்பாட்டாளர்கள் வரை விரைவாக சென்றடையக்கூடிய கட்சிக் கட்டமைப்பு மற்றும் தொடர்பாடல் போன்றவையும்,
செயற்திட்டங்களை விரைவுபடுத்தி செயற்படுத்தக்கூடிய போதியளவு தொண்டர்களைத் திரட்டத் தேவையான போதுமானளவு நிதி வளமுமே அவர்களின் பலமாக திகழ்கிறது. அவ்வாறான பலமான நிலையை அடைய கூட்டணியும் அர்ப்பணிப்பான செயற்பாடுகளை விரைவாக, தாயகம் மற்றும் புலம்பெயர் தேசம் தழுவிய வகையில் முன்னெடுக்க வேண்டும்.
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் தலைமைக் குழுவின் செயற்பாட்டிலிருந்து வட்டார அமைப்பாளர் ஒருவரின் மக்கள் சந்திப்புக்கான ஏற்பாடுகளை செய்வது வரை அனைத்துச் செயற்பாடுகளுக்கும் போதியளவு நிதி வளமும் பிரமிட் முறையிலான கட்டமைப்புமே தேவைப்படுகிறது. ஏனெனில், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் பெரும்பாலான உறுப்பினர்களைப் பொறுத்தவரையிலும் அவர்களுக்கு இருக்கக்கூடிய சமூக, இன உணர்வுகளை தாண்டி பொருளாதாரமே அவர்களது நாளாந்தச் செயற்பாடுகளை தீர்மானிக்கிறது.
தமிழர் சமூகத்தின் தற்போதைய மனநிலையில், ஊர்வலங்கள் பேரணிகள், பொதுக்கூட்டங்கள் எவையும் தன்னெழுச்சியாக இடம்பெறுவது அரிதாகிவிட்டன. தன்னெழுச்சியாக இடம்பெறும் போராட்டங்களில்கூட கலந்துகொள்ளும் மக்கள் தொகையை நாம் அறிவோம். தமது பலத்தை, எழுச்சியை எடுத்துக் காட்ட தொழிலாளர் தினத்தை முன்னெடுப்பதில் குறியாக இருக்கும் அரசியல் மற்றும் தொழிற்சங்கத் தரப்பினர் அதிக விலை கொடுத்தே பெருந்திரளான மக்களை அணி திரட்டிக் கொள்கின்றனர்.
தாயகத்தில் இன்று செயற்படும் அநேகமான தமிழ் தேசிய அரசியல் தரப்புகளின் செயற்பாடுகளுக்கு புலம்பெயர் அமைப்புகளிடமிருந்து கிடைக்கக்கூடிய நிதியே ஆதாரமாகத் திகழ்கிறது. சில சந்தர்ப்பங்களில் நிதியை வழங்குபவர்கள்கூட தமக்கிருக்கக்கூடிய அரசியல் நோக்கங்களின் அடிப்படையிலேயே செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர். இவ்வாறான செயற்பாடு தாயகத்தில் செயற்படும் அமைப்புகளின் சுயத்தை சோதிப்பதோடு, கட்சிகள் மீதான அழுத்தத்தையும் உணர வைக்கிறது. ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணிக்கு இதுவரையிலும் அவ்வாறான புலம்பெயர் ஆதரவு எதுவும் கிடைத்திருப்பதாக தெரியவில்லை.
வருடத்தில் ஒருமுறை முன்னெடுக்கப்படும் தொழிலாளர் நாள் நிகழ்வுகள் பல வகைகளிலும் முன்னெடுக்கப்படுவதை காண முடிகிறது. ஒன்று, தொழிலாளர் நலன்களை தமது பிரதான கொள்கையாக வரிந்து கொண்டுள்ள தொழிலாளர் அமைப்புகளை இணைத்து ஏனைய தரப்பினரின் பங்களிப்புடன் உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்படுகின்றன.
இரண்டாவதாக, புலம்பெயர் தரப்பினரிடமிருந்து நிதியினைப் பெற்று பேரணிகளும் பொதுக்கூட்டங்களும் நடாத்தப்படுகின்றன. மூன்றாவதாக, சுயமான நிதிமூலத்தின் உதவியுடன், போதியளவு அணிதிரட்டலுடன் ஜனரஞ்சகமான முறையில் பிரமாண்டமான அளவில் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. நான்காவதாக, குறைந்தபட்சம் தமது எண்ணங்களை வெளிப்படுத்தும் வகையிலும் தொழிலாளர்களின் பிரச்சினைகளை வலியுறுத்தும் விதத்திலும் அவர்களுக்கான ஆதரவை பறைசாற்றும் வகையிலும் பரந்தளவில் சுவரொட்டிகளும் பதாகைகளும் காட்சிப்படுத்தப்படுகின்றன.
எதிர்வரும் காலங்களில் எவ்வழியிலேனும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி சார்பாக தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் பிரதான சக்தியாக இயங்கக்கூடிய தொழிலாளர்களின் வெற்றி நாள் நிகழ்வுகளை முன்னெடுக்க உறுதிகொள்வோம்.
05.05.2023