அவுஸ்திரேலியாவின் பாதுகாப்புப் படை இலங்கை மற்றும் இந்தியப் பெருங்கடலின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள பிற நாடுகளுடன் நெருக்கமான இராணுவ உறவுகளை உருவாக்க தயாராகி வருவதாக தெ சட்டர்டே பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் கூட்டாட்சி அரசாங்கம் அவசர பிராந்திய பாதுகாப்பு அச்சங்களின் மத்தியில் இந்த முனைப்பை மேற்கொண்டு வருகிறது.
நாட்டில் கடந்த வாரம் வெளியிடப்பட்ட புதிய பாதுகாப்பு மூலோபாய மதிப்பாய்வைத் தொடர்ந்து, நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பு திட்டத்தை பசிபிக், தென்கிழக்காசியா மற்றும் தெற்காசியாவுக்கு அப்பால், வங்காள விரிகுடா மற்றும் அந்தமான் கடலில் உள்ள நாடுகளுக்கு விரிவுபடுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது.
இந்த விரிவாக்கப்பட்ட திட்டத்தில் இலங்கை, மாலைத்தீவு மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் அடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை அவுஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா மற்றும்; இந்தியாவுடனான உறவுகளை மேலும் விரிவுபடுத்தவும் வாய்ப்புள்ளதாக சட்டர்டே பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
அவுஸ்திரேலிவின் இந்த பாதுகாப்பு ஒத்துழைப்புத் திட்டத்தின்படி, கூட்டு இராணுவப் பயிற்சிகளை நடத்துதல், பங்காளி நாடுகளின் பணியாளர்களுக்குப் பயிற்சி அளித்தல், மூலோபாய உரையாடல்களை நடத்துதல் மற்றும் உள்கட்டமைப்பு ஆதரவை வழங்குதல் ஆகியவை அடங்கும். அத்துடன் இராணுவ நடவடிக்கைகளில் ஒன்றாக ஈடுபடுவதும் இதில் அடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.