தமது இடைக்கால அறிக்கை தொடர்பில் பல்வேறு தரப்பினரிடமும் இருந்து தற்போதுவரையில் 400 இற்கும் மேற்பட்ட யோசனைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயக்குழு தெரிவித்துள்ளது. குறித்த யோசனைகள் தொடர்பான தமது பதில்களை விரைவில் பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்துள்ளதாக உள்ளுராட்சி மன்ற எல்லை நிர்ணயக்குழுவின் தலைவர் மஹிந்த தே‌ஷப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயக்குழுவின் இடைக்கால அறிக்கை கடந்த 11ஆம் திகதி பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டது.

அரசியல் கட்சி உறுப்பினர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள், இது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தும் பொதுமக்கள், தமது  யோசனைகளை முன்வைக்க முடியும் என வழங்கப்பட்ட கால அவகாசம் கடந்த 27 ஆம் திகதியுடன் முடிவடைந்தது.

இவ்வாறு முன்வைக்கப்படும் யோசனைகள் ஆராயப்பட்டு, அதில் உள்ள காரணிகள் இறுதி அறிக்கையில் சேர்க்கப்படுமென உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயக்குழுவின் இறுதி அறிக்கை மே மாதம் மூன்றாம் வாரத்தில் இறுதி செய்யப்பட்டு கையளிக்கப்படுமென அதன் தலைவர் மஹிந்த தே‌ஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 4000 ஆக குறைக்கும் நோக்கில் இந்த எல்லை நிர்ணய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.