பங்களாதேஸுடனான இருதரப்பு சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான முதல் கட்ட பேச்சுவார்த்தையை இந்த மாத இறுதியில் இலங்கை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. குறித்த சந்திப்பானது எதிர்வரும் 29 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக, ஜனாதிபதி செயலகத்தின் சர்வதேச வர்த்தக அலுவலக பேச்சாளர் கே.ஜே. வீரசிங்க தெரிவித்துள்ளார். மெய்நிகர் மூலம் நடைபெறவுள்ள இந்த சந்திப்பில், ஒப்பந்தம் குறித்த யோசனைகள் மற்றும் அதனை எட்டுவதற்கான இறுதி திகதி உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் எட்டப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
குறித்த ஒப்பந்தத்தின் ஊடாக, இரு நாடுகளின் வர்த்தகம் 25 சதவீதத்தினால் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையே, முன்மொழியப்பட்ட சீனா – இலங்கை வர்த்தக ஒப்பந்தம், இந்தியாவுடனான பொருளாதார மற்றும் தொழிநுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை என்பனவற்றுக்காக இந்திய மற்றும் சீனா அதிகாரிகளின் பதிலை இலங்கை எதிர்பார்த்துள்ளது.
இதேவேளை, உத்தேச வர்த்தக உடன்படிக்கைகளை கைச்சாத்திடப்படுவதற்கு முன்னதாக, தனியார் துறை பங்குதாரர்களுடன் கலந்துரையாடல்களை முறையான முறையில் தொடர்வதாகவும் ஜனாதிபதி செயலகத்தின் சர்வதேச வர்த்தக அலுவலக பேச்சாளர் கே.ஜே. வீரசிங்க தெரிவித்துள்ளார்