அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஏற்றவாறு காணி கட்டளைச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். காணி முகாமைத்துவம் தொடர்பிலான நிறுவனங்களின் சட்ட ஏற்பாடுகளில் திருத்தம் மேற்கொள்வது மற்றும் சரத்துக்களை திருத்துவது, உள்ளீடு செய்வது ஆகிய விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று​(10) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு தகுதியான குழுவொன்றை நியமிக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

காலனித்துவ ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட காணி சட்டங்களே தற்போதும் நடைமுறையில் உள்ளதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி காணி பயன்பாடுகள் குறித்து பல்வேறு சந்தர்ப்பங்களில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டத் திருத்தங்கள் தற்போதைய அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு பொறுத்தமற்றதாக காணப்படுகிறதென தெரிவித்துள்ளார்.

அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு காணிகளை பெற்றுக்கொடுப்பதில் நிலவும் சிக்கல்களை நீக்கி புதிய தேசியக் காணிக் கொள்கை ஒன்றை உருவாக்குவது தொடர்பிலும்  ஆராயப்பட்டுள்ளது.