XPress Pearl கப்பல் நட்டஈட்டு வழக்கை சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்திலிருந்து அந்நாட்டின் சர்வதேச வர்த்தக நீதிமன்றுக்கு மாற்றுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தல் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் எதிர்கால தீர்மானங்கள் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடப்பட்ட பின்னர் சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்படுமென சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. நட்ட ஈடு தொடர்பான வழக்கு நேற்று (15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அந்நாட்டு நீதிமன்றம் இதனை தெரிவித்ததாக திணைக்களம் கூறியுள்ளது.
இந்த வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வழக்கானது குறித்த திகதிக்குள் சிங்கப்பூர் சர்வதேச வர்த்தக நீதிமன்றத்திற்கு மாற்றப்படுமா, இல்லையா என்பதை அறிவிக்க வேண்டுமெனவும் சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, XPress Pearl கப்பலால் ஏற்பட்ட பாதிப்பிற்கு நட்ட ஈட்டை அறவிடுவதற்காக ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தில் இன்று வழக்குத் தாக்கல் செய்தது.
6.4 பில்லியன் டொலர் நட்ட ஈட்டை செலுத்தத் தவறினால், வழக்கு தாக்கல் செய்யப்போவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் கிராமிய கடற்றொழில் அமைப்புகளால் குறித்த கப்பல் நிறுவனத்திற்கு கோரிக்கை கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
அறிவிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் XPress Pearl கப்பல் நிறுவனம் பதிலளிக்கத் தவறியதால், வணிக மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கு ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய இன்று நடவடிக்கை எடுத்தார்.
XPress Pearl கப்பல் விபத்தால் நாட்டின் கடல் வளத்திற்கு பாதிப்பு ஏற்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாகின்றது.
இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் சிங்கப்பூரில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் 6.4 பில்லியன் டொலர் நட்ட ஈடு கோரப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி இலங்கையின் மேல் நீதிமன்றத்தில் இன்று வழக்கு தாக்கல் செய்து குறித்த நட்டஈட்டுத் தொகையை பெற்றுத்தருமாறு நாட்டின் நீதிமன்றத்திடம் விண்ணப்பித்துள்ளது.
நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள நிலைமையின் கீழ் 6.4 பில்லியன் டொலர் என்பது நிவாரணமாக அமையும்.
கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில், சர்வதேச நாணய நிதியம் நான்கு வருட காலத்திற்கு இலங்கைக்கு மூன்று பில்லியன் டொலரையே வழங்குகின்றது.
எமது சுற்றுச் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்காக எவ்வித நிபந்தனையுமின்றி 6.4 பில்லியன் டொலரை பெற்றுக்கொள்ள முடியுமாயின், அது பொருளாதாரத்திற்கு நன்மையாக அமையும் அல்லவா?
அத்தியாவசிய மருந்து வகைகளை கொள்வனவு செய்ய, எரிபொருளை கொள்வனவு செய்ய, குறிப்பாக நாட்டு மக்களுக்கு நிவாரணத்தை வழங்க இந்த பணத்தை பயன்படுத்த முடியும்.
ஆனால், இந்த நட்ட ஈட்டினை பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் போதுமானளவு முயற்சியை மேற்கொள்கின்றதா?
இலங்கையில் வழக்குத் தாக்கல் செய்யாமல் சிங்கப்பூரில் வழக்குத் தாக்கல் செய்தமை, நட்டஈட்டினை வரையறுப்பதற்கு கப்பல் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கில் போதியளவு தலையீடுகளை மேற்கொள்ளத் தவறியமை, 250 மில்லியன் டொலர் இலஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டமை என்பனவற்றுக்கு மத்தியில், உறுதியான முடிவின்றி பிரச்சினை நீடிக்கின்றது.