பேச்சுகள் தொடரும், ஆனாலும் பலன் கிடையாது?
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ்பேசும் நாடாளுமன்ற பிரிதிநிதிகளுக்கும் இடையே நடைபெற்ற இரண்டு கட்டமான பேச்சுவார்த்தையில் பங்குகொண்ட தமிழ் தரப்பினர் தோற்றுப் போய்விட்டார்கள் என்று சொல்வதற்கில்லை. அதேபோல் பேச்சுக்களை புறக்கணித்தவர்கள் வென்றுவிட்டார்கள் என்று சொல்வதற்குமில்லை. ஏனெனில் ஜனாதிபதியுடன் நடைபெற்ற பேச்சுக்கள் ஒரு நீண்ட செயற்திட்டத்தின் ஆரம்பமுமல்ல. தேசிய இனப்பிரச்சினைக்களுக்கான பேச்சுகளின் முடிவுமல்ல.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வைப் பெறுவதற்காக ரணில் விக்கிரமசிங்கவுடன் மீண்டும் பேசவேண்டி வரும் என்று இரண்டு வருடங்களுக்கு முன்பு யாரும் சொல்லியிருந்தால் யாரும் நம்பியிருக்க மாட்டார்கள். ரணில் அவர்களின் நிலையும் அவரின் தலைமையிலான ஐ.தே.க வினது நிலையும் இலங்கை அரசியலில் இருந்து முற்றுலுமாக துடைத்தெறியப்பட்ட ஒரு நிலையிலேயே இருந்தது.
ஆனால் இன்று, “நான் வலிந்து எவரையும் பேச்சுக்கு அழைக்கவில்லை” என்று தமிழ் முஸ்லீம் கட்சிகளைப் பார்த்து கூறும் அளவுக்கு அவர் பலமானவராக, தேர்தல்களைப் போலவே இனப்பிரச்சினைத் தீர்வு விடயமும் தனது முன்னுரிமைப் பட்டியலில் இல்லை என்பதை சங்கடமேதுமின்றி வெளிப்படுத்தக் கூடியவராக தன்னை மாற்றியுள்ளார்.
பொருளாதார நெருக்கடிகளால் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினை சாதகமாக்கி இலங்கையின் மைய அரசியல் அதிகாரத்தில் தனது இருப்பை நிராகரிக்க முடியாததொன்றாக்கி நம்பிக்கையுடன் அடி எடுத்து வைத்தபோது ரணில் அவர்களின் எதிர்கால உடனடி செயற்திட்ட நிகழ்ச்சி நிரலில் அரசியல் தீர்வு முயற்சிகள் இருந்திருக்கும் என்பது சந்தேகமே. ஆனாலும் நாளாக, அரசியல் தீர்வு முயற்சிகள் பற்றியும் பேசத் தொடங்கினார். பொருளாதார நெருக்கடிகளில் இருந்து முற்றுமுழுதாக மீண்டு நாட்டை முழுமையாக அபிவிருத்தி செய்ய தேசிய இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வுதான் ஒரே வழி என சில சந்தர்ப்பங்களில் சொல்லியுமிருந்தார்.
ரணில் அவர்களின் இவ்வாறான பேச்சுகள் அவருக்கு புதிதல்ல, தமிழ் மக்களுக்கும் புதிதல்ல. கடந்த எழுபத்தைந்து ஆண்டுகால அரசியல்வாதிகளில், அறிவுபூர்வமான அனுபவமான தொலைநோக்குச் சிந்தனை கொண்ட மிகச் சிறந்த சிங்கள பௌத்த இராஜதந்திரி என்றால் அது ரணில் விக்கிரமசிங்காவாக மட்டுமே இருக்க முடியும்.
‘பேச்சுகள்’ எனும் ஒரு விடயம் தமிழ் மக்களைப் பொறுத்தவரையிலும் சலிப்பானதாக, நம்பிக்கை இழந்த ஒன்றாக, பின்னடைவுகள் நிறைந்ததொன்றாக கருதப்படுகின்றதென்றால் அந்த நிலை உருவானதில் தற்போதைய ஜனாதிபதிக்கும் கணிசமானளவு பங்குண்டு என்கின்ற கருத்துண்டு. பேச்சுகள் மூலமாகவும்கூட ஒரு தேசிய இனத்தின் எழுச்சியை, பலமான அரசியல் தலைமைத்துவத்தை பலவீனப்படுத்தலாம் என்று கற்றுணர்ந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் தென்னிலங்கையில் இருந்த அரசாங்கங்களில் ரணில் அவர்கள் பிரதான பங்காளியாக செயற்பட்டிருந்தார்.
சந்திரிக்காவின் ஆட்சியில் புலிகளுடன் மேற்கொண்ட அரசியல் தீர்வுப் பேச்சுகளிலும், மைத்திரியின் ஆட்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் முன்னெடுத்த அரசியல் தீர்வுப் பேச்சுகளிலும் தமிழ்த் தரப்பு பலவீனப்பட்டது மட்டுமே மிச்சமானது. அதேவேளை, அவ்வாறான ஒரு நிலை உருவாக, தமிழ்ச் சமூகத்தின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாத, சர்வதேச நாடுகளிடையேயான அரசியல் பொருளாதார உறவு நிலைகளைப் புரிந்து கொள்ளாத, தமிழ்த் தரப்புகளின் நெளிவுசுழிவற்ற ஒற்றைப் போக்கு அணுகுமுறையும், தனிநபர்கள் மீதான அதீதமான நம்பிக்கையும்கூட கணிசமானளவு பங்கை வகித்தன.
காலச்சக்கரம் சுழன்று இன்று மீண்டும் ரணிலுடன் பேசுவது பற்றி பேசப்படுகிறது. நிறைவேற்று அதிகார முறைமையில் அரசுத் தலைமையுடன் பேசாமல் முறைப்பதனால் எதுவுமே முன் நகராது. சாதாரண பொதுமக்கள் அப்பாவிகள். பேச முடியாது என்று வீறாப்பு பேசும் அரசியல்வாதிகள்தான் மாற்று வழியை அப்பாவி மக்களுக்கு அவசியம் முன்வைக்க வேண்டும்.
ஜனாதிபதியிடம் தமிழ் மக்களுக்கான அரசியல்தீர்வு குறித்த ஒரு உறுதியான, நிரந்தரமான எண்ணம், மதிப்பீடு இருப்பதாக நினைக்க முடியவில்லை. நல்லாட்சியில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுகளின் அடிப்படையிலாவது தொடரும் எண்ணம் எதுவுமில்லை. கடந்த காலங்களில் ஒரு சில சந்தர்ப்பங்களில் இணக்கம் காணப்பட்ட விடயங்களின் அடிப்படையில் பேச்சுக்களை முன்னெடுக்கவும் இஷ்டமில்லை. இடையே யாராவது ஒருவர் மாவட்ட அபிவிருத்திச் சபை பற்றி பிரேரித்தால் அதற்கும் ஆதரவு தெரிவிக்கப்படுகிறது. இடையே, பதின்மூன்றாம் திருத்தத்தை அரசியலமைப்பில் உள்ளபடி நடைமுறைப்படுத்த வேண்டும் அல்லது அச் சட்டத்தை அரசியலமைப்பில் இருந்து நீக்க யாராவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆலோசனையும் வழங்கப்படுகிறது.
எத்திசையிலும் மீறிச் செல்ல முடியாத இந்தியா, தேசிய இனப்பிரச்சினையும் இல்லை தீர்வும் இல்லை என்று மேலாதிக்க வெறியுடன் செயற்படும் பௌத்த மகாசங்கம், மத அடிப்படைவாதச் சிந்தனையுடன் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படும் முஸ்லீம் சக்திகள் என ஒவ்வொரு தரப்பினரதும் அழுத்தங்களை உணரும் வேளையிலும் முரண்பாடான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார்.
பாரியளவிலான மத முரண்பாட்டை வெளிப்படுத்தி நின்ற தையிட்டி விகாரை விவகாரம் சம்பந்தமாக தான் எதுவும் அறிந்திருக்கவில்லையென்று தமிழ்ப் பிரதிநிதிகளிடம் கூறியிருந்த நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்புக்குமான தலைவரான ஜனாதிபதி, இரண்டு வெவ்வேறு விக்னேஸ்வரன்கள் இன்னும் சிலருடன் இணைந்து கையொப்பமிட்டு அனுப்பியிருந்த ஆவணத்தின் அடிப்படையிலும் தனது கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
பேச்சுகள் என்பது ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவசியமான ஒன்று. ஆனால் அது எதுவரை? எத்தகைய திட்டங்களுடன்? யாரை திருப்திப்படுத்துவதற்கு? என்பதெல்லாம் அவரது எதிர்கால அரசியல் கனவைப் பொறுத்ததே. நாடாளுமன்றத்தில் ஒற்றை ஆசனத்துடன் அமர்ந்திருந்த அவரோ அவரது கட்சியோ இனிமேல் இழப்பதற்கு எதுவுமில்லையெனினும் கனவு கலையும் வகையிலான எத்தகைய நகர்வுகளையும் அவர் முன்னெடுக்க மாட்டார். வேறு எவரேனும் முன்னெடுக்கவும் அனுமதியார்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரையிலும்கூட பேச்சுகள் மிக மிக அவசியம். முடிந்தால் ஒரு தீர்வைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லையேல் இருப்பதைச் சிறப்பாக்கி பெற்றிட வேண்டும். அதுவும் இல்லையெனில் பௌத்த சிங்கள மேலாதிக்கச் சிந்தனை நிறைந்த ஆட்சியினது, அரசாங்கத்தினது தொடர்ச்சியான இன அழிப்புகளை அம்பலப்படுத்த வேண்டும்.
எமது நாட்டின் வரலாற்றில் மறைக்க, மறுக்க முடியாத உண்மை என்னவெனில், சிங்கள தேசமும் அதன் அரசியல், சமூக, மதத் தலைமைகளும் தாமாக உணர்ந்து விருப்பத்துடன் அழுத்தங்கள் ஏதுமின்றி ஏனைய சமூகங்களுக்கு எதனையும் செய்யவில்லை என்பதே. எமக்கான தீர்வு இதுவல்ல என்று தமிழ் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றதும் அரசியலமைப்பிலிருந்து முற்றாக நீக்கி விடவேண்டுமென்று பெரும்பாலான சிங்கள சமூகம் எதிர்க்கின்றதுமான அரைகுறையான பதின்மூன்றாவது திருத்தச் சட்டம்கூட புற அழுத்தத்தினால் ஏற்படுத்தப்பட்ட ஒன்றே.
அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை உருவாக்காமல், அதற்குரிய சக்திகளை இனம்கண்டு இணைத்து அல்லது இணைந்து செயற்படாமல் நாம் வாளாவிருப்போமானால் எமக்கு எவரும் எதுவும் தர முயற்சிக்கப்போவதில்லை. இந்நிலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மட்டுமல்ல சிங்கள அரசியல்வாதிகள் எவருக்குமே உவப்பானதொன்றே.
⁃ கே.என்.ஆர்