போராட்ட குழுக்கள் மீது கடந்த மே மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் தொடர்பிலான வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட குழுவினருக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இன்று முழுமையாக நீக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன, அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கஞ்சன ஜயரத்ன ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடையும் நீக்கப்பட்டுள்ளது.

மே 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பான வழக்கு இன்று கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ​​பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

மஹிந்த ராஜபக்ஸ, ரோஹித அபேகுணவர்தன, பவித்ரா வன்னியாராச்சி மற்றும் கஞ்சன ஜயரத்ன ஆகியோர் சந்தேகநபர்களாக பெயரிடப்படாததால், அவர்களது பயணத்தடையை நீக்க வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி ஷவேந்திர பெர்னாண்டோ மன்றில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான், அதற்கு அனுமதி வழங்கியதுடன், குறித்த உத்தரவை குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அனுப்புமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

நான்காவது சந்தேகநபராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மிலான் ஜயதிலக்க உள்ளிட்ட இருவரின் பயணத்தடையை நீதவான் நீடித்ததுடன், அவர்களை 10 மில்லியன் ரூபா சரீரரப் பிணையில் விடுவிக்கவும் உத்தரவிட்டார்.

சம்பவம் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ஹேவாகமகே மஞ்சுள, ரமேஷ் பானுக, ச்சமத் திவங்க மற்றும் நிஷாந்த டி மெல் ஆகிய நால்வரையும் விடுவிக்குமாறு நீதவான் மேலும் உத்தரவிட்டார்.