ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) இன் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் இன்று வவுனியாவில் நடைபெற்றது. ஏற்கனவே நடந்த கூட்டங்களின் தொடர்ச்சியாக இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் யாப்பில் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளன.
அதன் பிரகாரம், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்), தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகியவற்றின் தலைவர்கள் கூட்டணியின் இணைத் தலைவர்களாக செயற்படவுள்ளனர்.
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் செயலாளராக தொடர்ந்தும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்) இன் வே. நல்லநாதர் அவர்களும், பொருளாளராக ஜனநாயக போராளிகள் கட்சியின் க.துளசி அவர்களும், தேசிய அமைப்பாளராக ரெலோ அமைப்பின் கோ. கருணாகரம் அவர்களும் பேச்சாளராக ஈபிஆர்எல்எப் இன் சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து, அடுத்து வரவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரைக் கையாளுவது பற்றி கலந்துரையாடப்பட்டது.
மேலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடனான சந்திப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளின் தற்போதைய நிலைமை குறித்தும் கருத்துகள் பரிமாறப்பட்டன.
இறுதியாக, கூட்டத்தின் முடிவில், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) இன் பத்திரிகையாளர் மாநாடு இடம்பெற்றது.