19.06.2018இல் மரணித்த தோழர் கமல் அண்ணா (சின்னையா கமலபாஸ்கரன் – லண்டன்) அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவுநாள் இன்று….
தமிழ் தேசிய இனவிடுதலைப் போராட்டத்தில் ஆயுதப் போராட்டத்தை ஆதரித்த முன்னோடிகளில் ஒருவரான திருகோணமலையை பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த தோழர் சின்னையா கமலபாஸ்கரன் அவர்கள் மரணித்து இன்று ஐந்தாண்டுகள் ஆகிவிட்டன.

ஈழத்தின் திருமலையின் தவப்புதல்வனான அமரர் கமலபாஸ்கரன் அவர்கள் 1950க்களின் முற்கூறுகளில் மேற்படிப்பிற்காக பிரித்தானியாவுக்கு இடம்பெயர்ந்து அங்கு மருத்துவத்துறை தொழிநுட்பவியலாளனாக விளங்கினார்.
இலங்கையில் 50க்களில் இடம்பெற்ற இனக்கலவரங்களில் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட உயிரிழப்புகளையும் சொத்தழிவுகளையும் பின்னர் 60க்களில் உரிமைகோரி தமிழ்மக்களால் நடாத்தப்பட்ட சத்தியாக்கிரக போராட்டங்கள் சிங்கள பேரினவாத அரசுகளால் அடக்கியொடுக்கப்பட்டதையும் கண்டு ஒரு இளைஞனாக வெகுண்டெழுந்தார்.
பிரித்தானியாவில் வாழ்ந்த இலங்கைத் தமிழர்களை வெ.யோகேஸ்வரன் (முன்னாள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்) போன்றோருடன் சேர்ந்து ஒன்றிணைந்து இலங்கையரசின் இனவிரோத செயற்பாடுகளைக் கண்டித்து தமிழ் மக்களுக்கான உரிமைக்குரலை முதன்முதலில் சர்வதேச அரங்கில் ஒலிக்கச் செய்த முக்கிய செயற்பாட்டாளர்களில் முதன்மையானவராக தோழர் கமலபாஸ்கரன் அவர்கள் இருந்தார்.
70க்களின் ஆரம்பத்தில் சிங்கள பேரினவாத அரசிடமிருந்து ஜனநாயக வழிகளில் தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுவிட முடியாது என்ற தீர்க்கமான முடிவுக்கு வந்தவராக ஆயுதப்போராட்டம் முகிழ்க்க தொடங்கிய நாட்களிலேயே அதற்கு தீவிரமாக தனது பரிபூரண ஆதரவை வழங்கினார்.
‘தமிழ் புதிய புலிகள்’ எனும் பெயரில் ஆயுதபோராட்டம் ஆரம்பித்த காலத்திலிருந்து அது பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளாக மாற்றமடைந்த போதும்,; பின்னர் அது பிளவுபட்டு ‘தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்’; தோழர் க. உமாமகேசுவரன் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட போதும் தொடர்ந்து தனது பங்களிப்புகளையும் ஆலோசனைகளையும் இறுதிவரை வழங்கி வந்தார்.
1970க்களின் நடுப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான சர்வதேச கிளையொன்றை முதன்முதலாக லண்டனில் தோழர் சித்தார்த்தன், கிருஷ்ணன் போன்றோருடன் இணைந்து ஏற்படுத்தியவர்களுள் அமரர் கமலபாஸ்கரனும் ஒருவரென்பது குறிப்பிட வேண்டியது.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஆரம்பகர்த்தாக்களுள் ஒருவரான அமரர் சி. கமலபாஸ்கரன் அவர்கள் சர்வதேசமெங்கனும் பயணித்து தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் நியாயப்பாடுகளை பிரச்சாரப்படுத்தியதோடு அதற்கான ஆதரவையும் பெருமளவில் திரட்டியிருந்தார்.
புளொட் அமைப்பின் முன்னணி செயற்பாட்டாளராக இருந்த போதும் தமிழீழ விடுதலைக்காக போராடிய சகல அமைப்புக்களுடனும் நல்லுறவைப் பேணி வந்தவர்.
‘கமல் அண்ணை’என கழகத் தோழர்களால் அன்போடும், பெருமதிப்புடனும் அழைக்கப்பட்ட தோழர் கமலபாஸ்கரன் அவர்கள் இலங்கை-இந்திய சமாதான ஒப்பந்தத்தையடுத்து 1987ன் இறுதியில் இலங்கை வந்து எமது செயலதிபர் உமாமகேசுவரனோடு கலந்துரையாடி, ஒடுக்கப்படும் மக்களின் விடுதலைக்கான அமைப்பொன்றிற்கு அதன் பெயரில் இனமுலாம் பூசத்தேவையில்லையென்ற உயரிய சிந்தனையுடன், கழகத்தின் அரசியல் பிரிவுக்கு ‘ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி'(DPLF) என்கின்ற பெயரைச் சூட்ட தீர்க்கதரிசனத்துடன் துணை நின்றார்.
1995ல் ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமை பேரவை அமர்வுகளில் கழகத்தின் தலைவர் தோழர் சித்தார்த்தனுடன் இணைந்து, கலந்து கொண்டு இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக காத்திரமாக குரல் எழுப்பினார்.
இந்தியாவின் நேரடித் தலையீட்டின் பின்னர் போராட்ட பாதையில் விலகல்கள் ஏற்படுமென்பதை உணர்ந்தவராக, தீவிர அக்கறையுடன் அவ்வப்போது கழக தலைமையுடன் தொடர்பு கொண்டு நிலைமைகளை அறிந்து பயனுள்ள ஆலோசனைகளை வழங்கிய தோழர் கமலபாஸ்கரன் அவர்கள், 2009ல் ஆயுதப்போராட்டம் மௌனித்த போது எமக்குள் இருந்த ஒற்றுமையின்மையையிட்டு மனம் நொந்தார்.
அகதி முகாம்களில் வசிக்கும் மக்களினதும், உறவுகளை இழந்து தவிக்கும் மக்களினதும் வாழ்வின் மீதான நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டுமென அவாவுற்றார்.
இவர் தனது இறுதிமூச்சுவரை கழகத்தின் தோழனாக இருந்து ஈழத்தமிழினத்தின்
விடுதலையை நேசித்தார்.