ஸ்ரீலங்கன் விமான சேவையின் 70க்கும் மேற்பட்ட விமானிகள், போதிய வேதனம் இன்மையினால் ஏற்கனவே பணியிலிருந்து விலகியுள்ளதாக இலங்கை விமானிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தென்கொரியாவுக்குச் செல்லவிருந்த இலங்கைப் பணியாளர்கள் குழுவொன்று விமானம் தாமதமானதால் அந்த வாய்ப்பை இழந்த சம்பவம் தொடர்பில் அந்த சங்கத்தினர் அறிவித்தலொன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 470 என்ற விமானம் தாமதமானதால், தென்கொரியாவிற்கு செல்லவிருந்த இலங்கை பணியாளர்கள் குழுவொன்று அந்த வாய்ப்பை அண்மையில் இழந்ததுடன், பின்னர் இது தொடர்பில் நாடாளுமன்றத்தின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டது.

இவ்வாறானதொரு பின்னணியில் ஸ்ரீலங்கன் விமான சேவைகளின் விமானிகள் இன்று இந்த அறிவித்தலை விடுத்துள்ளனர். ஸ்ரீலங்கன் விமானிகளுக்கு போதிய வேதனம் மற்றும் கொடுப்பனவு வழங்காததால், கடந்த ஒரு வருடத்தில் 70க்கும் மேற்பட்ட விமானிகள் தமது தொழிலை விட்டு விலகியுள்ளதாகவும், மற்றொரு குழு விலக உள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

விமான நிறுவனத்தில் 330 விமானிகள் இருக்க வேண்டியிருந்தாலும், விமான நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களால், தற்போது 250 விமானிகள் மட்டுமே சேவையில் உள்ளனர் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தற்போது விமானிகள் பற்றாக்குறை நிலவுவதால், இதுபோன்ற அவசர காலங்களில் விமானிகளை நியமிப்பது கடினமானது என்றும் அந்த அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் விமானிகளுக்கு அவர்களின் தொழில் தரத்தை விட மிகக் குறைவான வேதனமே வழங்கப்படுவதாக இலங்கை விமானிகள் சங்கம் தெரிவித்துள்ளது.