இலங்கை தனித்துவ டிஜிட்டல் அடையாள திட்டம் (Sri Lanka Unique Digital Identity Project – SL-UDI) நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார். தொழில்நுட்ப அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழுவின் முதலாவது கூட்டம் பாராளுமன்றத்தில் அண்மையில் இடம்பெற்ற போதே இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் இதனை தெரிவித்தார். இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் இணைந்து இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
இந்த அடையாள அட்டைகளை வழங்குவதற்கு நபர்களின் சுய விபரங்கள், முகம், கருவிழி மற்றும் கைரேகை தரவுகள் என்பன மத்திய தரவுக்கட்டமைப்பில் உள்வாங்கப்படும் என கனக ஹேரத் குறிப்பிட்டார்.
அத்துடன், பிரஜைகளின் பிறப்புச்சான்றிதழ் முதல் அனைத்து ஆவணங்களையும் தரவுகளையும் ஒரு தனித்துவமான இலக்கத்தின் கீழ் டிஜிட்டல் மயப்படுத்துவது தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இது தொடர்பான யோசனை உள்வாங்கப்பட்டு, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் செயற்பாட்டுப் பொறிமுறையில் காணப்படும் குறைபாடுகள் காரணமாக நடவடிக்கைகள் தாமதமடைந்துள்ளதாகவும் கூட்டத்தின் போது அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தாமதங்களையும் பின்னடைவையும் ஏற்படுத்தும் கடந்த கால ஆவணங்களை டிஜிட்டல்மயமாக்க முயற்சிப்பதற்கு பதிலாக, ஒரு தொகுதியிலிருந்து புதிதாகத் தொடங்கி முன்னோக்கிச்செல்லும் வகையில் செயற்படுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.