விசேட வைத்தியர்களின் பற்றாக்குறை காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள சில வைத்தியசாலைகளில் சிகிச்சை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்(GMOA) தெரிவித்துள்ளது. பிரதான வைத்தியசாலைகளிலும் விசேட வைத்தியர்களின் பற்றாக்குறை நிலவுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர், வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளரிடம் வினவிய போது, இம்மாதம் 30 ஆம் திகதிக்குள் சுமார் 30 விசேட வைத்திய நிபுணர்கள் ஓய்வு பெறவுள்ளதாக கூறினார்.

தற்போது நிலவும் வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வாக தற்போது ஓய்வு பெற்றுள்ள விசேட வைத்தியர்களை மீண்டும் பணிக்கு அமர்த்த முடியுமாக என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

இதனிடையே, விசேட வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 ஆக அதிகரிப்பதற்கான அமைச்சரவை பத்திரம் இந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.