தாயகக்குரல் –
அமிர்தலிங்கம் அவர்களையும் நினைவுகூரத் தகும் –
இன்று, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அ. அமிர்தலிங்கம் அவர்கள் சூழ்ச்சிகரமான முறையில் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட முப்பத்திநான்காவது நினைவுநாள்.
புலிகளால் கொல்லப்பட்டதால் அமிர்தலிங்கம் அவர்கள் நிச்சயம் துரோகியாகத்தான் இருப்பார் எனும் மனக்கணக்கில் அல்லது மரணத்திற்கு அஞ்சி, தமது தலைவரின் நினைவுநாளைப் பற்றி உச்சரிக்க சொந்தக் கட்சியினரே – இன்றைய தமிழரசுக்கட்சித் தலைவர்கள் – ஒதுங்கி நின்ற வேளையில் புளொட் அமைப்பினரே அமிர்தலிங்கம் அவர்களின் நினைவுநாளை தமது மறைந்த தலைவர் உமாமகேஸ்வரன் அவர்களின் நினைவுநாளுடன் ஒன்றுபடுத்தி வீரமக்கள் தினமாக வருடந்தோறும் நினைவுபடுத்தி வருகிறார்கள்.
1977இல், தற்போதைய பொருளாதார சீரழிவு நிலையை ஒத்த சூழலில் சிக்கித் தவித்த இலங்கை மக்கள் மேற்கொண்ட ஒட்டுமொத்த தேர்தல் தீர்மானம் காரணமாக, சுதந்திரக் கட்சியானது நாடாளுமன்ற அரசியலில் ஓரங்கட்டப்பட, நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பு அமரர் அமிர்தலிங்கத்துக்கு கிடைத்தது.
தேர்தலில், தனிநாட்டுத் தீர்மானத்திற்கான ஆணையின் அடிப்படையில் வெற்றியைப் பெற்றுக்கொண்ட, தமிழரசுக் கட்சி – தமிழ்க் காங்கிரஸ் இணைந்த தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எதிர்பாராது கிடைத்த எதிர்க்கட்சி தலைவர் பதவி காரணமாக, பாரம்பரிய நாடாளுமன்ற அரசியல் யதார்த்தத்தை ஏற்று அனுசரித்துப் பயணிக்க முற்பட்டதன் காரணமாக அமிர்தலிங்கம் அவர்களும் அவரது சக நாடாளுமன்ற உறுப்பினர்களும் கடுமையான விமர்சனங்களை எதிர்நோக்கினர்.
குறிப்பாக, அவர்களுடன் மிகவும் விசுவாசமாக இயங்கிய இளைஞர்களிடமிருந்தே கடும் எதிர்ப்புகள் கிளம்பின. கூட்டணித் தலைவர்களின் தொடர்ச்சியான செயற்பாடுகளையும் அதனால் தமிழினத்திற்கு ஏற்படக்கூடிய பாதகமான நிலைமைகளையும் தமது மக்களிடம் பிரச்சாரப்படுத்துவதில் இனைஞர் அமைப்புகள் தீவிரமாக செயற்பட்டிருந்தன. மக்கள் தந்த ஆணையை கூட்டணி மீறுகின்றது என்று இளைஞர்கள் சாடினார்கள். பதிலுக்கு, நாடாளுமன்ற ஜனநாயக அரசியலின் யதார்த்தத்தை இளைஞர்களுக்கு புரிய வைக்கவும், தமது செயற்பாடுகளில் நியாயங்கள் உண்டு என மக்கள் மத்தியில் நிரூபிக்கவும் கடுமையான முயற்சிகளை கூட்டணித் தலைவர்கள் மேற்கொண்டனர்.
1981 இல் ஜே.ஆரினால் கொண்டுவரப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல் முறையில் பங்கு கொண்டதன் மூலம் கணிசமான தமிழ் இளைஞர்களின் ஆதரவவை கூட்டணி இழந்திருந்தது. ஆனாலும் தேவையான தருணங்களில் இளைஞர் அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுவதில் அமரர் அமிர்தலிங்கமோ , அவரது சகாக்களோ பின்னடிக்கவில்லை.
அதேசமயம், தென்னிலங்கையில், அரசின் முழு ஆசீர்வாதத்துடன் இயங்கிய பௌத்த சிங்கள இனவெறிச் சக்திகளின் கடுமையான எதிர்ப்புகளுக்கும் முகம் கொடுக்க வேண்டிய நிலைமையே நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கூட்டணிக்கு காணப்பட்டது. ஜே.ஆரினால் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பின் ஆறாவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிப்பதில்லை என்ற தீர்மானத்தின் பிரகாரம் தமது நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை துறந்து கூட்டணித் தலைவர்கள் தமிழகத்தில் தஞ்சமடைந்து கொண்டனர். நான்கு மக்கள் பிரதிநிதிகள் தாயகத்திலேயே தங்கிக் கொண்டனர்.
தமிழகத்தில் தஞ்சமடைந்த கூட்டணித் தலைமைத்துவமும் போராளி அமைப்புகளின் தலைமைத்துவங்களும் திம்புப் பேச்சுவார்த்தையில் தனித்தனி தரப்பினராக பங்கு கொண்டிருந்தாலும் தமக்கிடையில் ஆரோக்கியமான புரிந்துணர்வை கொண்டிருந்தன.
வங்க தேசத்தைப் பெற்றுக் கொடுத்த இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சியில் இலங்கையிலும் ஒரு தேசம் மலரும் எனும் ஒரு கனவுடன் கூட்டணியின் பல தலைவர்கள் அன்று இருந்தமை பலரும் அறிந்த விடயம். ஆனாலும் இந்திரா காந்தியின் விசேட தூதர் ஜி. பார்த்தசாரதி அவர்கள் அன்பாகவும் அறிவுரையாகவும் ஒரு எச்சரிக்கையை தமிழ்த் தலைமைகளுக்கு தெளிவாக வழங்கியிருந்தார். இலங்கையில் தனிநாடு ஒன்று அமைவதை இந்தியா என்றுமே ஏற்காது, அனுமதிக்காது என்பதே அது.
அன்று நிலவிய புவிசார் அரசியல் சூழலில் தெற்காசியாவில் அமெரிக்காவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த விரும்பிய இந்தியா, ஜே.ஆர் அரசை அச்சுறுத்தி கட்டுக்குள் வைத்திருக்கும் விதமாக தமிழ் ஆயுத அமைப்புகளை போசித்து வந்தாலும் தென்னிந்தியாவில் பிரிவினையை தூண்டக்கூடிய எத்தகைய நடவடிக்கையையும் தடுத்து நிறுத்த வேண்டும் எனும் வகையில் சொந்த நலனில் ஆழமான அக்கறையைக் கொண்டிருந்தது. இன்றைய வரையிலும் இந்தியா அந்த நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை.
தனது பிராந்திய நலனுக்காக, இந்தியாவின் தலையீட்டினால் ஏற்படுத்தப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தையும் அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தையும் கைவிட இந்தியா என்றும் விரும்பியதில்லை, விரும்பப்போவதுமில்லை. இவ்வாறான ஒரு ஒப்பந்தம் உருவாகுவதற்கு அமரர் அமிர்தலிங்கம் அவர்களும் ஒரு காரணம் என அந் நாட்களில் பெரிதும் நம்பபபட்டது. இருந்த போதிலும் புலிகளின் எச்சரிக்கையை மீறி, இந்தியப் படைகளின் பிரசன்னத்தை மட்டும் நம்பி மாகாண சபைத் தேர்தலில் பங்கேற்பதை கூட்டணி தவிர்த்திருந்தது. அதே நேரம், புலிகளின் முகவர்களாக செயற்பட்ட ஈரோஸ் அமைப்பை நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையாக வெற்றிகொள்ள வைத்து புலிகளையும் கையாள எதிர்பார்த்த இரட்டை நிலைப்பாட்டை இந்திய அரச அமைப்புகள் வெளிப்படுத்தியிருந்தன என்பதும் கவனிக்கத்தக்கது.
தமிழ் மக்களின் தனிநாட்டு ஆணையை மீறி பல்வேறு சந்தர்ப்பங்களில் செயற்பட்ட அமிர்தலிங்கம் அவர்கள் தமிழ் மக்களின் நலன்களின் பேரிலும் கள யதார்த்ததின் அடிப்படையிலுமே தான் அவ்வாறு செயற்பட வேண்டியிருந்ததாக தனது இறுதிநாள் வரையிலும் கூறி வந்தார். அனால் இன்றைய தமிழரசுக் கட்சியின் தலைவர்களோ தமிழ் மக்களின் ஆணையை மீறி எந்தச் சூழலிலும் செயற்பட முடியாது எனக் கூறுவதாக செய்திகள் வெளிவருகின்றன.
தெற்காசியாவில் வளர்ச்சி காணும் சீன ஆதிக்கத்தைக் கருத்திற்கொண்டு, இன்றைய நிலையில் இலங்கையுடனான உறவு சிறப்பான நிலையில் உள்ளது என இந்தியா கூற முற்படுகிறது. இலங்கையும் அதற்கு பாதகமாக செயற்படாது மிகக் கவனமாக இயங்குகிறது. ரணிலை மிகச் சிறப்பாக வரவேற்க புதுடில்லி தயாராகிறது என இலங்கை வந்து சென்ற இந்திய வெளிவிவகாரச் செயலர் கூறுகிறார். இவ்வாறான நிலையிலேயே ரணில் மீது அழுத்தம் கொடுக்கக் கோரும் மூன்று கடிதங்கள் பிரதமர் மோடிக்கு அனுப்பப்படுகின்றன.
ரணிலின் இந்திய பயணத்தின் போது, அரசியல் சாசனத்தில் காணப்படும் தமிழ் மக்கள் சார்ந்து கானப்படுகின்ற பதின்மூன்றாவது திருத்தத்தை, முழுமையாக நடைமுறைப்படுத்த அழுத்தம் பிரயோகிக்க வேண்டுமென்று கோரி அனுப்ப விரும்பிய கடிதத்தில் ஏனைய அமைப்புகளுடன் சேர்ந்து கையெழுத்திடுவது மக்களின் ஆணையை மீறுவதாக தமிழரசுக் கட்சியினர்கதை சொல்கிறார்கள். இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சட்டத்தை அமுல்படுத்துவதில், அதை உருவாக்கிய தரப்பினரின் அக்கறையை தூண்டுவதில் மக்கள் ஆணை எங்கே மீறப்படுகிறது என்பதை தமிழரசுக் கட்சிதான் புரிய வைக்க வேண்டும்.
புலிகளின் முகவர்களாக தங்களை அடையாளப்படுத்துவதில் ஆர்வம் கொண்டுள்ள, புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிச் செயற்பாட்டாளர்(?)களிடம் நிதியுதவிகளைப் பெற்று அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்கிக் கொண்டுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் பதின்மூன்றாவது திருத்தத்தை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோருவதை சாதாரண தமிழ்மகன் கூட புரிந்து கொள்வார். ஆனால் அதை பிரதமர் மோடியூடாக ஜனாதிபதி ரணிலிடம் கோருவதில் உள்ள மேட்டுக்குடி ராஜதந்திரத்தைத்தான் புரிய முடியவில்லை.
இலங்கையில், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில், இந்தியா தன் விருப்பம், வரையறை அனைத்தையும் தெளிவாக பல வழிகளிலும் சொல்லியாயிற்று. அதனை விளங்க மறுத்து வேறு விடயங்களுக்கு கடிதம் அனுப்புவது, தனது கொள்ளவைத் தாண்டி எதுவும் வாங்கித் தரமுடியாத, விரும்பாத ஒரு நண்பனிடம் இரந்து கேட்கும் ஒரு ஏழை நண்பனின் நிலையை ஒத்தது.
நாம், விரும்பும் தீர்வை கேட்டு போராட வலுவற்றவர்களாக உள்ளோம். பத்திரிகை அறிக்கை அடையாள ஆர்ப்பாட்டம் சிறு தூரப் பேரணி என்ற அளவுக்கு பலவீனப்பட்டு விட்டோம். நேரடியாக அரசுக்கு அழுத்தம் கொடுக்கவல்ல எந்த வழிமுறையும் கைவசம் இல்லை. யாரிடமும் சொல்லி, கரைச்சல் கொடுத்து, அவர்களது நலன்களோடு எமது நலன்களை இணைத்து எமது தேவைகளை பெறவேண்டும் என எண்ணும் நாம் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக, அவர்களால் முடியாத ஒன்றைக் கோரமுடியுமா என்பதையாவது சிந்திக்க வேண்டும். இல்லையென்றால் அந்த வழிக்கு போய் எம்மை அரசியல் அறிவிலிகளாக காட்டிக்கொள்ளக் கூடாது.
இந்தியாவின் பங்களிப்பில் உருவான பதின்மூன்றம் திருத்தத்தின் சிதைவைத் தடுத்து அதன் பலனை முழுமையாக தமிழர்களுக்குபெற்றுக் கொடுக்கும் கடப்பாடு இந்தியாவுக்கு உள்ளதென்பதை ரணிலின் சந்திப்பில் உறுதிப்படுத்திக் கொள்ளும், சமகால சூழலுக்கேற்ப கோரிக்கைகள் கடிதங்களில் முன்வைக்கப்பட வேண்டும்.
இதன் மூலம், இந்திய அரசுக்கும் அதன் வெளியுறவுத் துறைக்கும் ஒரு தெளிவை ஏற்படுத்த வேண்டும். யதார்த்தத்தின் அடிப்படையில் அயலுறவு அரசியலைக் கையாளக் கூடிய தமிழ்த் தரப்பினரை இந்தியா அடையாளப்படுத்திக் கொள்ளவும், அதனை அங்கீகரிக்கவும்கூடிய வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கபப்ட வேண்டும். அடுத்த கட்டம் பற்றி நிறைய ஐயங்களை சுமந்து நிற்கும் தமிழினம் மீண்டெழுந்து நகரவும் தமிழினம் தமக்குரிய பொருத்தமான தலைமைத்துவத்தை கண்டுணரவும் தமிழ் அமைப்புகளின் அயலுறவுக் கையாளுகைகள் உதவியாக அமையக் கூடும்.
ஒருமித்த அணியினர் எனும் பேரில், பாரம்பரிய கோசங்களுடன் யதார்த்தங்களைப் புரியாது புவிசார் நிலைமைகளை கையாளுவதிலிருந்து விடுபட்டு, காலத்திற்கும் களத்திற்கும் புவிசார் அரசியலுக்கும் முக்கியமாக எமது மக்களுக்கும் பொருத்தமான அணுகுமுறையை துணிவுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் முன்னெடுக்கும் அரசியல் தலைமையே இன்றைய தேவையாகும்.
-கே.என்.ஆர்
13.07.2023