நன்றி தலைவர் அவர்களே!
நண்பர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் அவர்களால் கொண்டுவரப்பட்டிருக்கின்ற இந்த தீர்மானம் மிகவும் முக்கியத்துவம் மிக்க தீர்மானமாகும். நான் நினைக்கின்றேன், இலங்கைப் பாராளுமன்றத்தில், ஓத்திவைப்புப் பிரேரணையாக இருந்தாலும் கூட இவ்வளவு நேரம், ஏறக்குறைய ஐந்து மணித்தியாலங்களுக்கும் மேலாக விவாதிக்கப்படுகின்ற ஒரு பிரேரணை இதுதான். பாலஸ்தீன மண்ணில் மேற்கொள்ளப்படுகின்ற அழிப்பை உடனடியாக நிறுத்தவும், சுதந்திர பலஸ்தீன அரசொன்றை நிறுவவும் ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்ட தீர்மானங்களை, அது தொடர்பான உலகளாவிய கருத்துக்களை நடைமுறைப்படுத்த வெற்று வார்த்தைகளுக்குப் பதிலாக நடைமுறைச் செயற்திட்டத்தின் அவசியம் பற்றி, சபை இந்த ஒத்திவைப்பு வேளையிலே பிரேரிக்கின்றது என்று அவர் கூறியிருந்தார்.
அதனை இந்த சபையின் இரு பக்கங்களிலும் இருக்கக்கூடியவர்கள், வேறு எந்த ஒரு விடயத்திலும் ஒன்றாக கருத்துச் சொல்ல முடியாதவர்கள் சொல்லாதவர்கள் அனைவருமே இந்த விடயத்திலே மிகத் தெளிவாக இந்த பிரேரணையை ஆதரிக்கின்றார்கள்.
எங்களை, தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் பலஸ்தீன மக்களுக்கு நாங்கள் மிக நீண்ட காலமாக எங்களுடைய ஆதரவை தொடர்ந்து கொடுத்து வந்திருக்கின்றோம். எங்களுடைய மிதவாதக் கட்சிகளாக இருக்கலாம் போராட்ட இயக்கங்களாக இருக்கலாம் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்திருக்கின்றோம். என்னைப் பொறுத்தமட்டில், இங்கு சபையிலே முன்னால் இருக்கக்கூடிய டக்ளஸ் தேவானந்தாவைப் பொறுத்தமட்டில் நாங்கள் நேரடியாகவே பலஸ்தீன இயக்கத் தோழர்களுடன் பலஸ்தீன மக்களுடன் வாழ்ந்தவர்கள், அங்கு இருந்தவர்கள், அங்கேயெல்லாம் போய் பழகியவர்கள். அவர்களுடைய உணர்வுகளை நன்றாக உணர்ந்தவர்கள், அறிந்தவர்கள். தங்களுடைய ஒரு தனிநாட்டை அடைய வேண்டும் என்பதிலே அவர்களுக்கு இருக்கின்ற ஆர்வம், அக்கறை, உணர்வு இவைகளை நேரடியாக பார்த்தவர்கள்.
ஆகவே, இந்த இரண்டு பக்கங்களிலும் சபையில் இருக்கக்கூடிய அங்கத்தவர்கள் ஒற்றுமையாக முழுமனதாக இந்த பிரேரணையை ஆதரித்துப் பேசுவது என்பது ஒரு மிகப்பெரிய காரியாகமாகவே நான் பார்க்கின்றேன்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் முதன்முதலாக பலஸ்தீன இலங்கை நட்புறவு சங்கத்தை உருவாக்கியவர். பலஸ்தீனருடன் மிக நெருங்கிய நட்பாக இருந்தவர். அவர் அவ்வாறு இருக்கின்ற போதெல்லாம் எங்கள் மனதுக்கு திருப்தியாக இருந்தது, ஏனென்றால் ஏறக்குறைய ஐயாயிரம் கிலோமீற்றர்களுக்கு அப்பால் இருக்கக்கூடிய மக்களுக்காக இவ்வளவு உணர்வாக கதைக்கின்றவர் நிச்சயமாக இந்த நாட்டுக்குள்ளே இருக்கக்கூடிய தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கு ஒரு ஜனநாயமான தீர்வை நோக்கியாவது கதைப்பார் என்று எதிர்பார்த்தோம், பலரும் எதிர்பார்த்திருந்தார்கள். அது நடக்கவில்லை. அவர் மாத்திரமல்ல. இந்த சபையிலே நாங்கள் பார்க்கின்றோம். பலரும் பலஸ்தீனர்களுக்காக கதைக்கின்றார்கள். நல்லது. வரவேற்கின்றோம். அது கதைக்கப்பட வேண்டிய விசயம் என்பதையும் ஒப்புக் கொள்கிறோம்.
ஆனால் தமிழ் மக்களுடைய நியாயமான பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமென்பதில் மட்டும் அவர்களுக்கு அக்கறையில்லை. ஏன் நான் இதைக் கூறுகின்றேன் என்றால், நீங்கள் உங்கள் நாட்டிலே இருக்கக்கூடிய இன்னொரு இனத்தை அதாவது தமிழ் பேசுகின்ற மக்களை தமிழ் மக்களை இரண்டாந்தர பிரஜைகளாக ஒடுக்குவது மாத்திரமல்ல, அவர்களுடைய சகல உரிமைகளையும் கொஞ்சம் கொஞ்சமாக பறித்து இரண்டாந்தர பிரஜைகள் ஆக்கிக் கொண்டு, நீங்கள் இன்னொரு நாட்டிற்கு அந்த நாட்டில் உரிமையைக் கொடு என்று சொன்னால் அதாவது தனியரசைக் கொடு என்று சொன்னால் உலகத்திலே எவரும் அதைக் கேட்க மாட்டார்கள். ஏனென்றால் நீங்கள் ஒரு விசுவாசமாக அதைச் சொல்லவில்லை என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஆகவே அதை நீங்கள் விசுவாசமாக சொல்ல வேண்டும். சொல்வதற்கு உங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். உதாரணத்துக்கு பல விசயங்கள் உள்ளன.
இன்று பாலஸ்தீன ஜெனின் முகாமிலே ஜூலை மாதம் 3ம் திகதி ஆரம்பித்த அழிவைப்பற்றிச் கதைக்கின்றோம். ஜூலை மாதம் 3ம் திகதி பத்துப்பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நூற்றுக்கும் அதிகமானவர்கள் காயப்பட்டிருக்கிறார்கள். 30 வீதத்திற்கும் மேல் குழந்தைகளும் தாய்மாரும். அதைவிட பொருட்சேதங்களும். இப்படியாக எல்லாம் அங்கு அழிவு ஏற்பட்டிருக்கிறது. ஏறக்குறை 1948 இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்ட பின்பும் 1968 இல் இஸ்ரேலிய அரபு யுத்தத்திற்குப் பிறகும் பலஸ்தீனர்களுடைய தாயகபூமிகள் முழுக்கவும் காசா, மேற்குக்கரை, எருசலம் கிழக்கு ஆகிய இடங்கள் எல்லாம் பாலஸ்தீன மக்கள் விரட்டியடிக்கப்பட்டு அந்தப் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டன. பாலஸ்தீனர்கள் யாரைக் கேட்டாலும் அவர்கள் இந்தப் பகுதிகளை இஸ்ரேல் என்று கதைக்க மாட்டார்கள். ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்கள் என்றே சொல்வார்கள்.
அப்டியான ஒரு நிலைப்பாடுதான் எங்களுடைய பகுதிகளிலும் நடக்கின்றது. யுத்தத்திற்குப் பிறகு மக்கள் துரத்தியடிக்கப்பட்டிருக்கிறார்கள். சரித்திர ரீதியாக பார்க்கின்றபோது உலகத்திலேயே தாயக பூமியிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட அகதிகள் அவர்கள் அரபு நாடுகளிலும் மற்றைய இடங்களிலும் வாழுகிறார்கள். ஆகக்கூடிய அகதிகள் பலஸ்தீனியர்கள். அதேபோல தமிழர்களும் மிகப்பெரிய தொகையாக ஏறக்குறைய 15லட்சம் மக்களுக்கும் மேல் அகதிகளாக விரட்டியடிக்கப்பட்டிருக்கின்றார்கள். வெளிநாடுகளிலே சீவிக்கிறார்கள். அது இந்தியாவாக இருக்கலாம் ஐரோப்பாவாக இருக்கலாம், கனடாவாக இருக்கலாம்.
பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்திற்கும் எங்களுக்கும் இடையிலே ஒரு மிக நெருங்கிய ஒற்றுமைகள் இருக்கின்றது. அதன் காரணமோ தெரியாது. எங்களுடைய இயக்கங்களை சார்ந்த தோழர்கள், இளைஞர்கள் பலர் எண்பது, தொண்ணூறுகளில் அங்கு சென்று பலஸ்தீனத் தோழர்களுடன் வாழ்ந்திருக்கிறார்கள். அங்கு இருந்திருக்கின்றார்கள். அது இந்த இயக்கம் என்று அல்ல. பீ.எல்.ஓ தலைவர் அரபாத்தினுடையதோ அல்லது பீ.எவ்.எல்.ரி யோ இப்படியாக பல வழிகளிலே நாங்களும் அவர்களும் மிக ஒற்றுமையாகவே இருக்கின்றோம்.
இலங்கையைப் பொறுத்தமட்டில் விசேடம் ஒன்று இருக்கின்றது. என்னவென்றால், இலங்கையிலே யுத்தம உச்சத்திலே நடந்து கொண்டிருந்த போதும்கூட, தென்னிலங்கை அரசுக்கும் வடகிழக்கிலே இருக்கக்கூடிய மக்களுக்குமிடையிலே யுத்தம் நடந்து கொண்டிருந்த போதுகூட, இரண்டு பக்கமுமே ஒற்றுமையாக பலஸ்தீனர்களுடைய விடுதலைக்காக குரல் கொடுத்துக்கொண்டுதான் இருந்தோம்.
நான் கொழும்பிலே காலஞ்சென்ற அஸ்ரப் அவர்கள் நடாத்திய ஒரு கூட்டத்திலே பங்குபற்றியிருந்தேன். அதிலே பல பலஸ்தீனியர்கள் அரபு நாட்டவர்கள் எல்லாம் வந்திருந்தார்கள். அப்போது அநுர பண்டாரநாயக்கவும் அங்கு இருந்தார். அப்போது நான் சொன்னேன். ஏதிர்க்கட்சித் தலைவர் அநுர பண்டாரநாயக்க இருக்கிறார், நானும் இருக்கிறேன். நாங்கள் ஒற்றுமையாக உங்களை ஆதரிக்கின்றோம். ஆனால் எங்களுக்குள்ளே வேற்றுமை இருக்கின்றது. எங்களுக்குள்ளே யுத்தம் நடந்து கொண்டிருக்கின்றது. இருந்தாலும் நாங்கள் உங்களை ஆதரிப்பதிலே ஒரு ஒற்றுமை இருக்கிறது என்று.
அந்த ஒற்றுமையை மனதிற் கொண்டு இந்த நாட்டிலே இருக்கக்கூடிய தேசிய இனப்பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வைக் காணுவதன் மூலம்தான் இலங்கை எடுக்கக்கூடிய சரியான நடவடிக்கைகளும் நிச்சயமாக சர்வதேச ரீதியாக எற்றுக் கொள்ளப்படும், நிமிர்ந்து பார்க்கப்படும். இலங்கை வெறும் வாய்ச்சவடால் இல்லாமல் அதை சொல்லவேண்டும். சொல்லுவதற்கு நியாயமாக அவர்களுக்கு ஒரு மனவுறுதி இருக்க வேண்டும். மனவுறுதியுடன் அதைச் சொன்னால்தான் அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
நான் சொல்லவில்லை, ஏதோ இவர்கள் இதை விரும்பவில்லை, அவர்கள் பாசாங்கு பண்ணுகிறார்கள் என்று. அவர்களுக்கும் பலஸ்தீனர்களுக்காக பேச விருப்பம் இருந்தாலும் கூட, அவர்களைப் பொறுத்தமட்டில் அவர்கள் இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணாமல் இருக்கும் வரையும், பலஸ்தீனர்கள் மட்டுமல்ல, வேறு எந்த ஒரு வெளிநாட்டு விடுதலைப் போராட்டத்தையும் ஆதரிக்க வெளிக்கிட்டால் அதை ஒருவருமே சரியான முறையிலே பார்க்க மாட்டார்கள்.
ஆகவே முதலில் எங்களுடைய பிரச்சினைக்கும் ஒரு நியாயமான தீர்வு காண்போம். அதேநேரத்தில் பலஸ்தீனர்களுடைய விடுதலைக்காக நாங்கள் தொடர்ந்தும் குரல் கொடுக்க வேண்டும். அரசாங்கத்தைப் பொறுத்தமட்டில் ஐக்கிய நாடுகள் சபையிலே ஆதரிக்கலாம். பல விடயங்களைச் செய்யலாம். ஏனென்றால் சில வேளைகளில் அரசாங்கங்களுக்கு பிரச்சினை வரலாம். இஸ்ரேல் நாடு இங்கு வந்து உதவியிருக்கிறது. யுத்த காலத்திலே அரசாங்கத்துக்கு பெரியளவிலே உதவினார்கள். ஆகவே அரசாங்கம் என்ன செய்வது.
பலஸ்தீனிய இயக்கங்கள் கூடுதலாக தமிழ் இயக்கங்களுடன்தானே இருந்தார்கள். இப்படியான சிந்தனைககள்கூட அவர்களுக்கு இருக்கலாம். ஏனென்றால் சிலர் இவ்வாறு சொல்லி நான் கேள்விப்பட்டிருக்கின்றேன். அதை எல்லாம் மறந்து ஒரு நியாயமான தீர்வைக் கண்டு, தொடர்ந்தும் பாலஸ்தீன விடுதலைக்காக உழைப்போம் என்று கூறி விடைபெறுகின்றேன். நன்றி.