ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதால், ஜனாதிபதியின் கீழ் உள்ள அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கிணங்க, பாதுகாப்பு பதில் அமைச்சராக பிரமித்த பண்டார தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார். ஷெஹான் சேமசிங்க, நிதி மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், திலும் அமுனுகம பதில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கனக ஹேரத் பதில் தொழில்நுட்ப அமைச்சராகவும் அனூப பெஸ்குவல் பதில் பெண்கள், சிறுவர்கள் மற்றும் சமூக வலுவூட்டல் பதில் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, சாந்தனி விஜேவர்தன ஜனாதிபதியின் பதில் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதியின் செயலாளர் நாடு திரும்பும் வரை இது அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் பதில் செயலாளராக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டமை வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும்.
சிரேஷ்ட அரச அதிகாரியான சாந்தனி விஜேவர்தன தற்போது ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளராக கடமையாற்றி வருகின்றார்.