நாட்டில் தற்போது சமுர்த்தி கொடுப்பனவு பெற்று வரும் 3,93,094 குடும்பங்களுக்கு மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை தொடர்ந்து சமுர்த்தி கொடுப்பனவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அஸ்வெசும சமூக நலன்புரித்திட்டம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற மேன்முறையீடுகளையும், ஆட்சேபனைகளையும் மீள் பரிசீலனை செய்த பின்னர் 2024 ஆம் ஆண்டுக்கான புதிய விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
தற்போது சமுர்த்தி உதவித்தொகை பெறும் சுமார் 12,80,000 குடும்பங்கள் அஸ்வெசும நலன்புரி உதவிகளுக்காக விண்ணப்பித்துள்ள நிலையில், 8 ,87,653 குடும்பங்கள் இந்த திட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய, நிவாரணம் பெற குறித்த தகுதிகளைப் பூர்த்தி செய்யாத 3,93,094 குடும்பங்களின் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் மீதான விசாரணைகள் முடியும் வரை வழமைபோன்று அவர்கள் பெற்று வந்த சமுர்த்திக் கொடுப்பனவை தொடர்ந்தும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
சமுர்த்தி வங்கிகள் ஊடாக அவர்களுக்கான தவணைக் கொடுப்பனவுகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அஸ்வெசும சமூக நலன்புரித் திட்ட உதவிகள் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் தற்போது பிரதேச செயலாளர்களின் தலைமையில் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனிடையே, சமுர்த்தி பயனாளர்களுக்கும் அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்பட வேண்டியது கட்டாயமானதென சமுர்த்தி அதிகாரிகள் சங்கத்தின் பிரதம செயலாளர் சாமர மத்துமகளுகே கூறியுள்ளார்.