வறட்சி காரணமாக 4 மாகாணங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு, வட மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் வறட்சி காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறித்த 4 மாகாணங்களில் 28000 குடும்பங்களைச் சேர்ந்த 89408 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
யாழ்.மாவட்டத்தின் நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, சாவகச்சேரி, மருதங்கேணி, சங்கானை பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த மக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.
கிழக்கு மாகாணத்தின் கிண்ணியா, சேருவில, குச்சவெளி, வெருகல், மூதூர், கோமரங்கடவல பிரதேச செயலகப் பிரிவுகளில் 2746 குடும்பங்களை சேர்ந்த 8976 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வட மேல் மாகாணத்தில் குருணாகல், பமுனகொட்டுவ, கிரிபாவ பிரதேச செயலகப் பிரிவுகளை சேர்ந்த மக்களும் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரை நாட்டிற்கு போதியளவு மழைவீழ்ச்சி கிடைப்பதற்கான சாத்தியமில்லை என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.