2024 ஆம் ஆண்டில் அரச சேவைக்கான ஆட்சேர்ப்புகளுக்கு வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட மாட்டாது என நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளை தயாரிப்பதற்கான வழிகாட்டல்களை அமைச்சுகளுக்கு வழங்கிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அடுத்த ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் புதிய நிர்மாணப்பணிகளும் உள்ளடக்கப்படவில்லை.

இதேவேளை, அரச நிறுவனங்களுக்காக வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் 2024 ஆம் ஆண்டிலும் அமுலில் இருக்கும் என வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டு வழிகாட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச நிறுவனங்களுக்கான புதிய தளபாடங்கள், அலுவலக உபகரணங்கள் மற்றும் பாகங்கள் கொள்வனவு செய்யப்படுவது இயலுமானவரை மட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2024 வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளைத் தயாரிக்கும் போது, ​​குறைந்தபட்ச உள்ளீடுகள் மூலம் மாற்றத்தை ஏற்படுத்துவது ஒவ்வொரு அரசு நிறுவனங்களின் பொதுவான இலக்காக இருக்க வேண்டும் என நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதுடன், இது கடுமையான, நீண்ட கால, பரந்தளவிலான பொருளாதார, சமூக மற்றும் அரசியல் தாக்கங்களை ஏற்படுத்தும் என நிதி அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் 2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் பொது நிதி இலக்குகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின்  நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் பேரண்ட பொருளாதார மாற்றங்கள் உள்ளிட்ட சீர்திருத்தங்களை இலக்காகக் கொண்டு தயாரிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

2048 ஆம் ஆண்டளவில் அதிக வருமானம் பெறும் நாடாக மாறுவதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும், முதல் 05 வருடங்களில் இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மை அடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் நிதி அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.