உள்ளூராட்சி மன்றங்களில் 25% இளைஞர் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் C. தொலவத்த தெரிவித்துள்ளார். இலங்கையில் நீண்டகாலமாக இருந்து வந்த போதும், இடையில் இல்லாமல் போன அந்த வாய்ப்பை மீண்டும் இளைஞர்களுக்கு வழங்குவதே இதன் நோக்கம் என அவர் கூறியுள்ளார். இதற்காக அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவையும் பெற்றுக்கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இந்நாட்டு இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்குவதும், தீர்மானம் எடுக்கும் செயற்பாட்டில் இளைஞர் பிரதிநிதித்துவத்திற்கான வாய்ப்புகளை வழங்குவதும் ஜனாதிபதியின் வேலைத்திட்டம் என பாராளுமன்ற உறுப்பினர் தொலவத்த தெரிவித்துள்ளார்.