இந்த ஆண்டு ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிடுவதற்காக சம்பளமற்ற விடுப்பில் இருந்து மீண்டும் கடமைக்கு திரும்பிய வலிமேற்கு பிரதேச சபையில் கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்கள் சிலர், பிரதேசசபை செயலாளரினால் அழுத்தங்களுக்கு உள்ளாவதாக சம்பந்தப்பட்ட திணைக்கள உயர்மட்டத்திற்கு முறையிட்டுள்ளனர். இது தொடர்பாக மாகாண உள்ளூராட்சி ஆணையாளரிடமும் முறையிடப்பட்டுள்ளது.

வலிமேற்கு பிரதேச சபை உப அலுவலக பொறுப்பதியாக இருப்பவர் மீதும் சிரேஷ்ட வருமான பரிசோதகராக கடமையாற்றுபவர்கள் மீதே கடுமையான அழுத்தங்களை பிரயோகிப்பதாகவும் கடும் தொனியில் ஒருமையில் பேசி அச்சுறுத்துவதாகவும் குறித்த உத்தியோகத்தர்கள் முறையிட்டுள்ளனர்.
குறித்த உத்தியோகத்தர்கள் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களாக போட்டியிடுவதற்கு முன்பாக தமது அலுவலகங்களில் சிறப்பாக கடமை ஆற்றியிருந்தனர்.
அவர்கள் வேட்பாளர்களாக விடுப்பு பெற்று சென்று தற்சமயம் மீண்டும் பணியில் இணைந்துள்ள போதும் அவர்களின் பணிகளுக்குரிய ஒத்துழைப்பு மற்றும் பணிகளுக்கான மரியாதை வழங்குவதில்லை என்றும் குறித்த உத்தியோதர்கள் முறையிட்டுள்ளனர்.
சிரேஷ்ட வருமான பரிசோதகராக பணியாற்றிய உத்தியோகத்தரது புதிய தளபாடங்கள் அகற்றப்பட்டு தனக்கு அலுவலக பாவனையில் இருந்து நீக்கப்பட்ட பழைய தளவாடங்களை வழங்கப்பட்டுள்ளதாகவும் இதனால் தனது பணியை சிறப்பாக செய்ய முடியாது இருப்பதாகவும் செயலாளரினால் தான் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி இருப்பதாகவும், வருமான பரிசோதகர் சங்கத்திற்கு முறையிட்டுள்ளார்.
இது தொடர்பில் வரிமான பரிசோதகர் சங்கத்தினால், வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி உப அலுவலகங்களில் பொறுப்பதிகாரியாக இருப்பவர்களை நேரடியாக உப அலுவலகங்களுக்கு சென்று நிலைமைகளை அவதானிக்காமல் தொலைபேசி ஊடாக கடும் தொனியில் ஒருமையில் பேசி அச்சுறுத்ததாகவும் முறையிட்டுள்ளனர்.
உள்ளூராட்சி மன்றங்களின் ஆயுள் முடிவடைந்து அவை கலைக்கப்பட்ட பின்னர், உள்ளூராட்சிசபைகள் செயலாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.
இந்த காலப்பகுதியில் வடக்கில் சில உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.