நான்கு பிரதான துறைகள் ஊடாக இந்திய – இலங்கை உறவுகளை மேம்படுத்த எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். உணவு பாதுகாப்பு, வலுசக்தி பாதுகாப்பு, நிதியுதவி மற்றும் நீண்டகால முதலீடுகள் ஆகிய நான்கு துறைகள் ஊடாக இந்திய – இலங்கை உறவுகளை வலுப்படுத்த எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில் நேற்று (23) இடம்பெற்ற இலங்கை – இந்திய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் கூட்டத்தில் உரையாற்றிய போதே உயர்ஸ்தானிகர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை – இந்திய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் ஊடாக பரிமாற்ற வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய சபாநாயகர், இந்தியா வழங்கி வரும் ஆதரவுகளுக்கு இதன்போது நன்றி கூறியுள்ளார்.
இதனிடையே, இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இந்தியா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி S.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
காணொளி தொழில்நுட்பம் ஊடாக கலந்துகொண்டு அவர் இதனை கூறியதாக பாராளுமன்றம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை – இந்திய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட அங்கத்துவ உறுப்பினர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோரும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.