இலங்கைக்கு வழங்கியுள்ள 2.9 பில்லியன் டொலர் நீடித்த கடன் வசதியின் இரண்டாவது தவணையை விடுவிப்பதற்கு முன்னதாக இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழு செப்டம்பர் 14 ஆம் திகதி நாட்டிற்கு வருகைதரவுள்ளது. இந்த பிரதிநிதிகள் குழுவினர் செப்டம்பர் 27 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம் வழங்குகின்ற 2.9 பில்லியன் டொலர்  நீடித்த கடன் வசதி தொடர்பில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமைய, பல இலக்குகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது.

ஜூலை மாத இறுதியளவில் இந்த இலக்குகளில் 35 வீதமானவற்றை மாத்திரமே இலங்கை நிறைவேற்றியிருந்ததாக Verite Research நிறுவனம் அண்மையில் வௌியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இதில் மேலும் 43 வீதமான இலக்குகளை நிறைவேற்றுவதற்கான நவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு அமைய, கடன் மறுசீரமைப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது.

இதன் கீழ், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பிற்கான திட்டமொன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, ஊழியர் சேமலாப நிதியம் , ஊழியர் நம்பிக்கை நிதியம் உள்ளிட்ட ஊழியர் ஓய்வு நிதியங்களின் திறைசேரி முறிகள் ஊடாக அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள கடனை மறுசீரமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதுடன்,  அந்த முறிகளை மீண்டும் புதிய முறிகளாக விநியோகிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய முறிகளுக்காக 2025 ஆம் ஆண்டு வரை 12 வீத வட்டியும் அதன் பின்னர் 9 வீத வட்டியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு அமைய புதிய முறிகள் நேற்று விநியோகிக்கப்படவிருந்தாலும் அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையுடன் இணங்காத நிதியங்கள் மீது 30 வீத வரியை விதிப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் அடங்கிய, உள்நாட்டு இறைவரி திருத்த சட்டமூலம் உயர் நீதிமன்றத்தில் ஆட்சேபனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையே அதற்கான காரணமாகும்.

இது தொடர்பிலான மனு மீதான விசாரணை நேற்று நிறைவுபெற்றதால், அடுத்த வாரம் பாராளுமன்றம் கூடுகின்ற சந்தர்ப்பத்தில் பெரும்பாலும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அறிவிக்கப்படும் சாத்தியம் உள்ளது.

எவ்வாறாயினும், பாராளுமன்றம் அனுமதி வழங்கியவாறு எவ்வித மாற்றங்களும் இன்றி உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை மேற்கொள்வதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இன்று தெரிவித்தார்.

 உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டின் போது ஊழியர் நிதியங்கள் தொடர்பில் மாத்திரம் நடவடிக்கை எடுப்பது நியாயமானது அல்லவென தொழிற்சங்கங்களும் சிவில் அமைப்புகளும்  முன்னெடுத்த எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த நிலைமை தொடர்பாக நீதிமன்றத்திலும் அவர்கள் விடயங்களை சமர்ப்பித்ததுடன், ஆர்ப்பாட்டங்கள், கலந்துரையாடல்கள், செயலமர்வுகளை நடத்தி தௌிவூட்டல்களை மேற்கொண்டனர்.

இதன் ஒரு அங்கமாகவே கொழும்பில் நேற்று எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், மத்திய வங்கி பேச்சுவார்த்தைக்கான சந்தர்ப்பத்தை வழங்கத் தயார் என அறிவித்தாலும் நேற்றைய எதிர்ப்பு நடவடிக்கையில் கலந்துகொண்ட தரப்பினர் அதனை நிராகரித்தனர்.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு நடவடிக்கை,  அதன் ஊடாக ஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்களின் தற்போதைய இருப்பு எவ்வாறு பாதுகாக்கப்படும் என்பது தொடர்பாகவும்,  கடந்த சில வருடங்களாக வழங்கப்பட்ட நன்மைகள் அடுத்த சில வருடங்களில் எவ்வாறு வழங்கப்படும் என்பது தொடர்பிலும் தௌிவினை பெறுவதற்கான சந்தர்ப்பம் இதன் மூலம் அற்றுப்போனதாக மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.