முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப்பணிகளை எதிர்வரும் 05 ஆம் திகதி ஆரம்பிக்குமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் தர்மலிங்கம் பார்த்திபன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று(31) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நிதி கையாளுகை தொடர்பில் இன்று(31) மன்றில் ஆஜராகுமாறு மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை அதிகாரிகளுக்கு கடந்த தவணை வழக்கு விசாரணையின் போது நீதவான் உத்தரவிட்டமைக்கு அமைவாக அனைத்து தரப்பினரும் மன்றில் ஆஜராகியிருந்தனர்.
அத்துடன் இன்றைய வழக்கு விசாரணையில் யாழ்.சட்ட வைத்திய அதிகாரி எஸ்.பிரணவன், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணிகளான வி.கே.நிரஞ்சன், ரனித்தா ஞானராஜா மற்றும் பொலிஸார் உள்ளிட்ட தரப்பினர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
இந்நிலையில், அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்புடன் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் கடந்த ஜூன் மாதம் 29 ஆம் திகதி சில மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன.
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்காக கனரக இயந்திரம் கொண்டு நிலத்தை தோண்டிய போது இந்த மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.