இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை ஆரம்பிப்பதற்கு, மத்திய நீர்வழி போக்குவரத்து அமைச்சு அனுமதி மறுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. தமிழகம் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு விரைவில் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படவுள்ளது. மாநில அரசின் ஒத்துழைப்புடன், மத்திய கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சு இந்த பணியை நேரடியாக மேற்கொள்ளவுள்ளது. இராமேஸ்வரத்திலிருந்து தலைமன்னார் மற்றும் காங்கேசன்துறைக்கு இரு வழித்தடங்களில் பயணிகள் கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க தமிழக கடல் சார் வாரியம் தீர்மானித்துள்ளது.

தமிழக சட்டசபையில், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைவாயிலாக இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.

இதற்காக, இராமேஸ்வரம் சிறு துறைமுகத்தில் கப்பல் அணையும் மேடை, பயணிகள் தங்குமிடம், சுங்கம் மற்றும் குடியுரிமை பிரிவு சோதனை மையங்கள் என்பவற்றை அமைக்க மத்திய நீர்வழி போக்குவரத்து அமைச்சிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது அனுமதி வழங்க இயலாது என அமைச்சு தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

மத்திய அரசின் முன் அனுமதி பெறாமல் இந்த திட்டத்தை அறிவித்தமையே இதற்கான காரணமென எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், தமிழக கடல் சார் வாரியம், அனுமதியைப் பெறுவதற்கான தொடர் முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.