இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன் உள்ளிட்ட 4 பேரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பில் சென்னை உயர் நீதிமன்றில், இந்திய மத்திய அரசு பதில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது. முருகனை திருச்சி அகதிகள் முகாமில் இருந்து விடுவித்து தன்னுடன் சேர்ந்து வாழ அனுமதிக்கக் கோரி நளினி வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

4 பேரின் கடவுச்சீட்டுகள் உள்ளிட்ட பயண ஆவணங்களை பெற்றுத்தருமாறு கோரி கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவிற்கான இலங்கை துணை தூதரகத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

பயண ஆவணங்கள் கிடைத்தவுடன் 4 பேரும் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த  நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 2022 ஆண்டு நவம்பர் மாதம் இந்திய உச்ச நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டனர்.

எனினும், முருகன் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.