தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) இன் அரசியல் செயற்பாட்டு முன்னணியாக உருவாக்கப்பட்ட ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டு இன்று முப்பத்தைந்து ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.
சமஷ்டிக் கட்டமைப்பின் அடிப்படையிலான முழுமையான அரசியலமைப்பு மாற்றம் ஒன்றின் மூலமே தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு சாத்தியம் எனும் கொள்கையின் அடிப்படையில் செயற்படும் நோக்கிலேயே அன்று கட்சி எனும் கட்டமைப்புக்குள் எம்மை இணைத்துக் கொண்டோம்.

கழகமாக செயற்பட்டிருந்த காலத்திலும் தொடர்ந்து கட்சியாக செயற்பட்டு வரும் காலங்களிலும், ஒரு புனிதமான நோக்கத்திற்காக ஒன்றாக இணைந்து உண்டு உறங்கி போராடிய பல நூற்றுக்கணக்கான உன்னதமான தோழர்களை நாம் இன்று இழந்து நிற்கிறோம்.
தீர்வுக்கான கால அட்டவணை பற்றிய எண்ணப்பாடுகள், ஏமாற்றுத்தனங்கள் ஏதும் அறியாமல் தாம் சுமந்த பொறுப்புகளை சக தோழர்களிடம் ஒப்படைத்துச் சென்ற தியாக தீபங்கள் அவர்கள்.
ஆயுதப் போராட்டம் ஒன்றை நடாத்தும் அமைப்பின் இலக்கு, விதிகள் மற்றும் நடத்தைகளுக்கும், ஜனநாயக நடைமுறைகளுக்குட்பட்டு செயற்படும் கட்சிகளின் இலக்கு, விதிகள் மற்றும் நடைமுறைகளுக்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பினும் அவற்றின் உறுப்பினர்களிடம் இருக்கக்கூடிய அர்ப்பணிப்பு, மக்கள் மீதான அக்கறை, அம் மக்கள் சார்ந்த செயற்பாடுகளில் இருக்கக்கூடிய நேர்மை, வெளிப்படைத் தன்மை, பொறுப்புக்கூறல் என்பவற்றில் வேறுபாடுகள் எதுவும் இருக்க முடியாது.
எமது மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதகமான, அவர்களது பாதுகாப்பைக் கேள்விக்குட்படுத்தக்கூடிய அவலங்களுக்கு எதிரான செயற்பாடுகளில் சமரசங்களுக்கு இடமில்லாத வகையில் செயற்படுவதே நாம் எம்முடன் இணைந்திருந்த தியாகிகளுக்கு செலுத்தக் கூடிய பொருத்தமான அஞ்சலியாகும்.
எமது வாழ்வுரிமையை, வளங்கள் மீதான பயன்பாட்டு உரிமையை, சமய வழிபாட்டு உரிமையை இன்னோர் சமூகத்திடம் பாரப்படுத்திவிட்டு நாம் வாளாவிருக்க முடியாது.
அதேபோல் இன்னோர் சமூகத்தின் உரிமைகளை தீர்மானிக்கும் பொறுப்புகளை நாம் சுமக்க எத்தணிக்கவும் தகாது. வாழு, வாழ விடு என்பதே எமது உரிமைகளுக்கான போராட்டத்தின் அடிப்படை நியாயமாக இருக்க முடியும்.
சிதைந்த தேசமாக மாறி வரும் இலங்கைத் தீவு செழுமை பெற வேண்டுமாயின் சமஷ்டி அடிப்படையிலான சமூக, அரசியல் கட்டமைப்பே இறுதி இலக்காக இருக்க வேண்டும். சிங்கள பௌத்த பேரினவாதத்தால் முக்கால் நூற்றாண்டு காலமாக எமது மக்கள் மீது திட்டமிட்ட வகையில் திணிக்கப்படுகின்ற அனைத்து இன அழிப்பு நடவடிக்கைகளையும் முகம் கொடுக்கக்கூடியவர்களாக எம்மை மேலும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டுமாயின் தமிழர் தேசத்தின் ஜனநாயக கட்டமைப்புகளை வசப்படுத்திக் கொள்வதில் நாம் பின்வாங்க முடியாது என்பது காலத்தின் தீர்ப்பு. மக்கள் நம்பிக்கையை வென்ற, தம்முடன் இணைந்து பயணிக்கக்கூடியவர்கள் என மக்கள் நினைக்கக்கூடிய, அவர்களின் நாளாந்தப் பிரச்சினைகளில் பிரசன்னமாகக் கூடிய கட்சிகளும் அதன் செயற்றிறனான கட்டமைப்புகளுமே இன்று எம் மக்களுக்கு அவசியமாகின்றன.
தேர்தல்களில் பங்கு கொள்வது மட்டுமே எமது இலக்கு நோக்கிய போராட்டம் அல்ல. எனினும், கட்சியையும் அதன் கட்டமைப்புகளையும் பலப்படுத்திக் கொள்ளவும் மக்களை அணிதிரட்டவும் கட்சியொன்றின் பங்கு மிகப்பெரியது என்பதையும் மறுப்பதற்கில்லை.
தேசிய இனப் பிரச்சினைத் தீர்வுக்கான போராட்டம் அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்படுகிறதோ என அச்சப்படும் சூழ்நிலையில், மக்களின் வளங்களைப் பாதுகாத்தல். அதன் மூலம் மக்களின் வாழ்வைப் பாதுகாத்தல், மற்றும் பண்பாட்டு உரிமைகளை பாதுகாத்தல், பொருளாதார நெருக்கடிகளில் இருந்து அவர்களை மீட்டெடுத்தல் என அனைத்துக்கும் எம்மை தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமாயின், நாம் எமது கட்சியை இன்னும் இன்னும் பலமாக முன்னெடுத்துச் செல்ல உறுதி பூணுவோம்.
ஊடகப் பிரிவு
18.09.2023