நாட்டின் பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த ஆண்டிற்கு தேவையான சீருடைக்கு செலவாகும் முழுத் தொகையையும் வழங்க சீனா இணங்கியுள்ளது. கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியில் கலந்துகொண்டு கருத்துரைத்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்தார். இந்த ஆண்டு 70 வீதமான பாடசாலை சீருடைகளை சீன அரசாங்கம் வழங்கியிருந்ததாக அமைச்சர் குறிப்பிட்டார். இந்த நிலையில், அடுத்த ஆண்டிற்கு தேவையான பாடசாலை சீருடைகளையும் வழங்க சீனா இணங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
தற்போது 11 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டத்தை 22 இலட்சம் வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
உலக உணவுத் திட்டம் இதற்கு அனுசரணை வழங்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், தற்போது 2024 ஆம் ஆண்டுக்கு அவசியமான பாடப்புத்தகங்களில் 50 வீதமானவை அச்சிட்டு முடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டார்.
தனியார் துறையினருக்கு வழங்கப்படவுள்ள பாடப்புத்தகங்களை அச்சிடும் நடவடிக்கை இரண்டு வாரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் டிசம்பர் 15 ஆம் திகதியளவில் அனைத்து பாடப்புத்தகங்களையும் அச்சிடும் பணி நிறைவடையும் எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.