ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி சர்வதேச சிறுவர் தினம் கொண்டாடப்படுகிறது. சிறுவர்களே அனைத்தையும் விட பெறுமதி மிக்கவர்கள் எனும் தொனிப்பொருளில் இம்முறை சர்வதேச சிறுவர் தினம் இலங்கையில் கொண்டாடப்படுகிறது. சிறுவர்களுக்கு உரிய தேவைகள் மற்றும் அவர்களுக்கான விடயதானங்களை செயற்படுத்துவதும் கல்வி உரிமைகளை அவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதும் கட்டாயமானதே.
தற்போதைய சூழலில் உலகில் இலட்சக்கணக்கான சிறுவர்களும் முதியவர்களும் வறுமையினாலும் வன்முறைகளாலும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் சிறுவர்களை சென்றடைவது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
சிறுவர்களின் எதிர்காலத்தை நோக்கிய பயணத்தை சிறப்பாக அமைக்கும் நாளாக இன்றைய நாள் எதிர்பார்க்கப்படுகின்றது.
சர்வதேச சிறுவர் தினம் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி கொண்டாடப்படுகின்ற போதிலும், இலங்கையில் ஒக்டோபர் முதலாம் திகதி கொண்டாடப்படுகிறது.
1990 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி சர்வதேச ரீதியில் அமுலுக்கு கொண்டுவரப்பட்ட சிறுவர் உரிமை பிரகடனத்தில் 1991 ஆம் ஆண்டு இலங்கையும் கைச்சாத்திட்டுள்ளது.
தற்போது உலகில் சிறுவர்களின் எண்ணிக்கை 2 பில்லியனாக காணப்படுகின்றது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
இணையம் ஊடாக சிறுவர் துஷ்பிரயோகங்கள் வேகமாக அதிகரித்து வருவதாக அதன் தலைவர் உதயகுமார அமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார, சமூக நிலைமைகளை கருத்திற்கொண்டு சிறுவர்கள் விடயத்தில் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டுமென அவர் கூறுகின்றார்.
இதனிடையே சர்வதேச ரீதியில் இன்று முதியோர் தினமும் கொண்டாடப்படுகின்றது.
உலகளவில் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 771 மில்லியன் பேர் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆரோக்கியமாக மற்றும் அன்பான வாழ்க்கை அனைத்து முதியோருக்கும் கிடைக்க நாம் வாழ்த்துகின்றோம்.