முல்லைத்தீவு நீதவான் மற்றும் மாவட்ட நீதிபதி T.சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவால் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்காக விசாரணை குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நீதிபதியின் பதவி விலகல் தொடர்பில் நீதிச் சேவைகள் சங்கம் நேற்று(03) பிரதம நீதியரசரை சந்தித்து கடிதமொன்றை கையளித்திருந்தது.
சம்பவத்திற்கான காரணத்தையும் பொறுப்புக்கூற வேண்டியவர்களையும் கண்டறிய நடவடிக்கை எடுக்குமாறும் நீதிபதிகள் மற்றும் நீதிமன்றத்தின் சுயாதீனத்தைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நீதிச் சேவைகள் சங்கம் குறித்த கடிதத்தினூடாக பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுத்திருந்தது.