இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 7 பேரில் ஒருவரான சுதந்திரராஜா என்ற சாந்தன், தாம் தாயகம் திரும்பி தனது வயது முதிர்ந்த தாயுடன் வாழ உதவுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு இது தொடர்பிலான மனுவை அவர் அனுப்பி வைத்துள்ளதாக ‘த ஹிந்து’ செய்தி வௌியிட்டுள்ளது.

தாம் தற்போது திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் அல்லது உரிய ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டு பிரஜைகள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் சாந்தன் குறித்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

32 வருட சிறைவாசத்தின் போது தனது தாயாரை சந்திக்க முடியாத காரணத்தினால், இலங்கைக்கு திரும்பி தனது தாயை கவனித்துக்கொள்ள அனுமதிக்குமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவரது தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டை புதுப்பிப்பதற்கான மனுக்கள், உயர்ஸ்தானிகராலயத்தில் நிலுவையில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

திருச்சி சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை பிரஜைகளான ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என அஞ்சி இலங்கைக்கு திரும்புவதில்லை என தீர்மானித்துள்ளதாக ‘த ஹிந்து’ செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருவரும் நிவாரணம் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளதாக அந்த செய்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.