பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி விவகாரம், தமிழ் பேசும் மக்கள் மீதான அழுத்தங்கள், காணி அபகரிப்பு, மயிலத்தமடு – மாதவனை விவகாரம், சர்வதேச விசாரணை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து  கடையடைப்பு இன்று முன்னெடுக்கப்படுகின்றது.

இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ் ஈழ விடுதலை இயக்கம், தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழ் மக்கள் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி, ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகம் ஆகிய கட்சிகள் கடையடைப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளன

இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூம் ஆதரவு வழங்கியுள்ளது.

யாழ். சுன்னாகத்தில் வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடி கடையடைப்பிற்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.

அரச திணைக்களங்கள், அரச மற்றும் தனியார் வங்கிகள், அரச போக்குவரத்து சேவை ஆகியன இன்று இயங்கிய போதிலும், தனியார் போக்குவரத்து சேவைகள் இயங்கவில்லை.

சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் நகரங்களிலுள்ள மருந்தகங்கள், உணவகங்கள் தவிர்ந்த அனைத்து வர்த்தக நிலையங்களும் சந்தை தொகுதிகளும் மூடப்பட்டுள்ளன.

சாவகச்சேரி நீதிமன்ற சட்டத்தணிகள் கடையடைப்பிற்கு ஆதரவு தெரிவித்து மன்றுக்கு வருகை தராமையால் வழக்கு விசாரணைகள் தவணையிடப்பட்டன.

அச்சுவேலி, தெல்லிப்பளை நகரங்களிலும் இன்று பல கடைகள் மூடப்பட்டிருந்தன.

யாழ். நகரிலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளதுடன், தனியார் போக்குவரத்து சேவைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

முல்லைத்தீவு – மாங்குளம், மல்லாவி, துணுக்காய் பகுதிகளில் கடையடைப்பு முன்னெடுக்கப்படுகின்ற போதும், மாங்குளம் பகுதியில் சில கடைகளும் மல்லாவி பகுதியில் சில இடங்களில் வர்த்தக நிலையங்களும் திறக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதிகளில் தனியார் போக்குவரத்து இடம்பெறவில்லை என்பதுடன், அரச போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டன.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படும் கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, கிளிநொச்சி – பரந்தன் நகரிலும் இன்று வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.

வவுனியா நகரில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தன.

வவுனியாவில் பாடசாலைகளுக்கு மாணவர்கள் வருகை தந்திருந்தனர்.  எனினும், சட்டத்தரணிகள் நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகியுள்ளனர்.

இதனிடையே, மட்டக்களப்பிலும் வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடி கடையடைப்பிற்கு ஆதரவு வழங்கியுள்ளனர்

மட்டக்களப்பு பொதுச்சந்தை மூடப்பட்டிருந்த நிலையில், வியாபார நடவடிக்கைகள் முழுமையாக முன்னெடுக்கப்படவில்லை.

கிரான் மற்றும் சித்தாண்டி, ஓட்டமாவடி பகுதிகளில் பல கடைகள் மூடப்பட்டுள்ளன.

இந்த இடங்களில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுவதுடன, வங்கிச் சேவைகள் மந்த கதியில் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு – செங்கலடி, ஏறாவூர் பகுதிகளிலும் இன்று வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.