Shi Yan 6 எனப்படும் சீன ஆய்வுக் கப்பல் இலங்கை கடற்பிராந்தியத்தில் புவிசார் அரசியல் பரபரப்பை உருவாக்கியுள்ளது. இந்த கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது. சீனாவின் மூன்று போர்க் கப்பல்கள், ஒரு நீர்மூழ்கிக் கப்பல், இந்திய கடற்பிராந்தியத்தில் நங்கூரமிட்டுள்ள ஆய்வுக் கப்பல் தொடர்பில் இந்திய கடற்படை உன்னிப்பாக அவதானித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எதிர்வரும் நவம்பர் மாதம் அரபிக் கடலில் Sea Guardians என்ற பெயரில் சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து கூட்டு கடற்படை பயிற்சியை நடத்த திட்டமிட்டுள்ளமையே இந்தியாவின் இந்த கண்காணிப்பிற்கான காரணமாகும். இந்த கடற்படை பயிற்சிக்காகவே நீர்மூழ்கிக் கப்பல் வருகை தந்துள்ளதாகவும் மலாக்கா நீரிணையில் இருந்து பாரசீக வளைகுடா வரையிலான அவர்களின் கடற்படை பயிற்சியை இந்திய கடற்படை கண்காணித்து வருவதாக The Times Of India செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவின் உளவுக் கப்பல் துறைமுகத்திற்கு வருகை தருவது தொடர்பில் இலங்கைக்கு இந்தியா தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்ததாகவும் சீனாவின் ஆராய்ச்சி கப்பலான Yuan Wang 5 கப்பல் கடந்த வருடம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தந்தமையானது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பாரிய இராஜதந்திர நெருக்கடிக்கு வித்திட்டதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், கடல் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் கடல்சார் மற்றும் ஏனைய தரவுகளையும் சீன ஆய்வுக் கப்பல்கள் வரைபடத்தில் உள்ளடக்குவதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.