சீனாவின் Shi Yan 6 ஆய்வுக் கப்பலின் கடல்சார் ஆய்வுப் பணிகள் இன்றுடன்(31) நிறைவடைகின்றன. குறித்த கப்பல் கொழும்பு பெந்தர கடற்பகுதியில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருவதாக நாரா நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம், கலாநிதி கமல் தென்னகோன் தெரிவித்துள்ளார். இந்த கப்பல் Sea Of Sri Lanka எனப்படும் இலங்கை கடற்பரப்பில் நேற்று(30) ஆய்வு நடவடிக்கைகளை ஆரம்பித்தது. இலங்கை கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சீனக்கப்பலுக்கு 48 மணித்தியாலங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கப்பல் நேற்று(30) பிற்பகல் 1 மணி வரை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்தது.

இதன்போது கடல் நீரின் வெப்பநிலை, கடல் நீரோடைகளின் நிலை, அது மீன்களை எவ்வாறு பாதிக்கிறது, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஆய்வு செய்யப்படவுள்ளதாக நாரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் கடல் நீரின் வெவ்வேறு நீர்நிலைகளின் மாதிரிகளும் ஆய்வுக்குட்படுத்தப்படவுள்ளன.

சீன ஆய்வுக் கப்பலில் நாரா நிறுவனத்தின் 4 உறுப்பினர்களும் கடற்படையின் 2 உறுப்பினர்களும் ஆய்வு நடவடிக்கைகளில் பங்கேற்றுள்ளனர்.