பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கங்களின் சம்மேளனம் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. வரி நெருக்கடி, பல்கலைக்கழகங்களுக்கான வளங்கள் குறைக்கப்படுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாக சம்மேளனத்தின் ஊடகப்பேச்சாளர் சாருதத்த இலங்கசிங்ஹ தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகங்களின் அனைத்து கல்விசார்,  கல்விசாரா ஊழியர்களும் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பேராதனை பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

ரஜரட்ட பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றிணைந்த கூட்டமைப்பும் வேலை நிறுத்தத்தில் இணைந்துள்ளது.

அவர்கள் இன்று நாள் முழுவதும் அனைத்து சேவைகளில் இருந்தும் விலகியுள்ளனர்.

ருஹூணு பல்கலைக்கழகத்தின் கராபிட்டிய வைத்திய பீட விரிவுரையாளர்களும் இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு வௌியிட்டுள்ளனர்.

 இதனிடையே, வவுனியா பல்கலைக்கழக ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள பல்கலைக்கழக அலுவலகத்தின் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 அத்துடன், மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திற்கு அருகிலுள்ள  கிழக்கு பல்கலைக்கழக வளாகத்திற்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக நிர்வாக உத்தியோகத்தர்கள் சங்கம் என்பன இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தன.