• அரச நிறுவனங்களில் வெற்றிடங்கள் நிரப்பப்படுகின்ற போது, அந்தந்த மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த அரச பிரதிநிதிகளுக்களையும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் கடந்த 9ம் திகதி சந்தித்து கலந்துரையாடிபோது இடம்பெற்ற கருத்துப் பரிமாறல்களைத் தொடர்ந்து இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
• தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்தம் ஆயிரம் ரூபா வழங்குவதாக வழங்கிய வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தோட்டத் தொழிலாளர்கள் தமது வேலைகளை விட்டு வெளியேறினால் நாட்டின் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
• யாழ்ப்பாணம் – கொடிகாமம் பகுதியின் கொடிகாமம் புத்தூர் சந்தி இடையே இன்றுகாலை தனியார் பேருந்தும் கூலர் வாகனமொன்றும் மோதி விபத்துக்குள்ளானது. கூலர் வாகன சாரதி படுகாயமடைந்துள்ள நிலையில் ஏனையவர்கள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
• 2024ஆம் ஆண்டு இலங்கையில் புதிய விளையாட்டு பல்கலைக்கழகத்தை 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள செலவில் திறக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக இளைஞர் மற்றும் விளையாட்டு இராஜாங்க அமைச்சர் ரோஹண திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இளங்கலை கல்விப் பட்டம், இளங்கலை அறிவியல் பட்டம், ஒருங்கிணைந்த வருடாந்திர வளர்ச்சி விகிதம் மற்றும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆகியவை அதன் உள்ளடக்கங்களில் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறினார்.
• காஸாவில் ஏற்பட்டுள்ள போர் நடவடிக்கையினால் எரிபொருள் விநியோக நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்கும் வகையில் எரிபொருள் இருப்புக்களை பாதுகாப்பாக பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதிக எரிபொருளை கொள்வனவு செய்வதற்கும் சேமிப்பதற்கும் போதிய நிதியின்மை மற்றும் எரிபொருளை சேமிப்பதற்கு போதுமான வசதிகள் இல்லை. நாட்டில் 30 நாட்களுக்கு போதுமான எரிபொருள் மட்டுமே கையிருப்பில் உள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மாபா பத்திரன குறிப்பிட்டுள்ளார்.
• கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த விமானம் ஒன்றின் மலசலகூடத்தில் தங்கத் தூள் அடங்கிய பார்சல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று (11.11.2023) மதியம் 1:35 மணியளவில் சென்னைக்கு புறப்பட இருந்த ஏஐ 272 விமானத்தின் கழிப்பறையில் உரிமை கோரப்படாத பார்சல் இருப்பதை விமான ஊழியர்கள் அவதானித்துள்ளனர். தொடர்ந்து விமானப்படையின் அதிகாரப்பூர்வ நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டுள்ளது.
• கையடக்கத் தொலைபேசி சிம்களைப் புதுப்பிக்கும் செயற்பாட்டின் கீழ் நாடளாவிய ரீதியில் சிம்களை மீள் பதிவு சேவையை நடத்த தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தாங்கள் பயன்படுத்தும் சிம்களை தங்கள் பெயரில் பதிவு செய்திருக்க வேண்டும் மற்றும் அவர்களின் தேசிய அடையாள எண்ணின் கீழ் வழங்கப்படும் சிம் பற்றி அறிந்திருக்க வேண்டும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சூ132சூ என்ற எண் மூலம், தற்போது பயன்படுத்தும் தொலைபேசி நிறுவனம் தொடர்பான தகவல்களை மக்கள் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
• உலக மக்கள்தொகை 800 கோடியைக் கடந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு நிலையம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், கடந்த செப்டம்பர் 26 ஆம் திகதி உலக மக்கள்தொகை 800 கோடியைக் கடந்து உள்ளது.
• முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட இருவரை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த உத்தரவை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது ஹிருணிகா பிரேமச்சந்திர நீதிமன்றில் முன்னிலையாகி இருக்கவில்லை.
• முல்லைத்தீவு மாவட்டம், கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் எதுவரை உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன என்பதனைக் கண்டறிய ரேடாரைப் பயன்படுத்த நீதிமன்றத்திடம் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. கொக்குத்தொடுவாயில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் இடம்பெற்ற நிலையில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.
• அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுஜன பெரமுன கட்சியே தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினரான எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார். அத்துடன் அழிவில் இருந்து மீண்டெழுந்து ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வெற்றிகரமாகப் பயணித்துக் கொண்டிருக்கின்றது. எவராலும் பொதுஜன பெரமுன கட்சியை அழிக்க முடியாது என்றும் எஸ்.எம். சந்திரசேன குறிப்பிட்டுள்ளார்.