மட்டக்களப்பு, மயிலத்தமடு – மாதவனை பகுதியில் அத்துமீறி குடியேறியவர்களை வெளியேற்றுமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றம் இன்று(13) தீர்ப்பளித்தது. மயிலத்தமடு – மாதவனையில் மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான அரச காணியில், அத்துமீறி குடியேறியதாகத் தெரிவித்து 13 பேருக்கு எதிராக ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் மகாவலி அதிகார சபையினால் கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி அன்வர் சதாத் முன்னிலையில் இன்று(13) இறுதி தீர்ப்பிற்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது அத்துமீறி குடியேறியதாகத் தெரிவிக்கப்பட்ட 13 பேரும் நீதிமன்றில் இன்று(13) ஆஜராகினார்.

மகாவலி அதிகார சபை சார்பாக மன்றில் அரச சட்டத்தரணி டில்கானி டி சில்வா ஆஜராகியிருந்தார்.

அரச அதிகாரம் பெற்ற அதிகாரிகளின் எவ்வகையான ஆவணமும், அத்துமீறி குடியேறியவர்கள் என குற்றஞ்சாட்டப்பட்டவர்களால் நீதிமன்றத்தில்  சமர்ப்பிக்கப்படாததால், மயிலத்தமடு மாதவனை பகுதியில் அத்துமீறி குடியேறிய 13 பேரையும் வெளியேற்றுமாறு நீதவான் கட்டளை பிறப்பித்தார்.