2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் பாராளுமன்றத்தில் இன்று (13) சமர்ப்பிக்கப்பட்டது. அரச ஊழியர்களுக்கான வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு 10,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டமை இம்முறை வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்ட முக்கிய நிவாரணமாகும். நிதி அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று நண்பகல் வரவு செலவு திட்ட யோசனையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.  ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அவர் சமர்ப்பிக்கும் இரண்டாவது வரவு செலவு திட்டம் இதுவாகும்.

வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 10,000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 2,500 ரூபாவினால் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய வரவு செலவு திட்டத்தில் நான்கு புதிய பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

1.3 மில்லியன் அரசாங்க ஊழியர்களுக்கு தற்பொழுது வழங்கப்படும் 7,800 ரூபா வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 17,800 ரூபாவாக 10,000 ரூபாவால் அதிகரிக்கப்படும் என  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில்  தெரிவித்தார்.

அத்துடன், இந்த கொடுப்பனவின் அதிகரிப்பு ஏப்ரல் மாதம் முதல் மாதாந்த சம்பளத்துடன் சேர்த்து, ஜனவரி முதல் மார்ச் வரையிலான நிலுவைத் தொகை, அடுத்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் தவணை முறையில் ஆறு மாதங்களில் வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

ஓய்வூதியம் பெறுபவர்களின் மாதாந்த வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு 2,500 ரூபாவிலிருந்து 6,025 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிகரிப்பு 2024 ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும், பல்கலைக்கழக மற்றும் தொழில்நுட்ப கல்வியை விரிவாக்கும் நோக்கில், நான்கு புதிய பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

சீதாவக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கீழ் குருநாகல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், முகாமைத்துவ மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் சர்வதேச காலநிலை மாற்ற பல்கலைக்கழகம் என்பன அவையாகும்.

முதியோர் கொடுப்பனவை 1000 ரூபாவால் அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, தற்போது 2000 ரூபாவாகவுள்ள முதியோருக்கான கொடுப்பனவை 3000 ரூபா வரை அதிகரிப்பதாக உறுதியளித்தார்.

அஸ்வெசும, சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு, இயற்கை அனரத்தங்களில் பாதிக்கப்படுவோருக்கான கொடுப்பனவு ஆகியவற்றுக்கு ஒதுக்கப்படுகின்ற நிதியை அதிகரிக்கவும் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

நகர்ப்புறங்களில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள  வாடகை வீடுகளின் உரிமையை அதன் பயனாளிகளுக்கு முழுமையாக வழங்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி கூறினார். தற்போது அவர்கள் செலுத்தி வருகின்ற வாடகையை முழுமையாக நீக்குவதாகவும் ஜனாதிபதி அறிவித்தார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்காக காணி உரிமை வழங்க 4 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யவும் ஜனாதிபதி வரவு செலவு திட்டத்தில் யோசனை முன்வைத்துள்ளார்.

சீரற்ற வானிலை, வௌ்ளம் மண் சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள வீதிகள் மற்றும் பாலங்களை புனரமைக்க 2 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வடக்கு கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலை மேம்படுத்துவதற்காக 500 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்யவும் இம்முறை வரவு செலவு திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கில்  யுத்தம் முடிவடைந்து  14 வருடங்கள் கடந்துள்ள நிலையில், மீள்குடியேற்றப் பணிகளை முன்னெடுப்பதற்காக  2000 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்ய ஜனாதிபதி யோசனை முன்வைத்தார்

குறித்த பகுதிகளில் வீடமைப்பு திட்டங்கள் இன்னமும் பூரணப்படுத்தப்படாதுள்ளதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி வடக்கு, கிழக்கில் வீடமைப்புத் திட்டங்களை முன்னெடுக்கவும் வசதிகளை மேம்படுத்தவும் 500 மில்லியன்  ரூபாவை ஒதுக்கீடு செய்யவுள்ளதாக கூறினார்.

வடக்கு, கிழக்கில் காணாமல் போனவர்களுக்காக அவர்களது குடும்பங்களுக்கு இழப்பீடுகளை வழங்க  வரவு செலவு திட்டத்தில் 1500 மில்லியன் ரூபாவை அறிவித்த ஜனாதிபதி, அந்த பணிகளை துரிதப்படுத்துவதற்காக மேலதிகமாக 1000 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், பாலியாறு நீர் விநியோகத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான பணிகளை அடுத்த வருடம் ஆரம்பிக்க 250 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.

சுற்றுலா மற்றும் எரிசக்தி துறையில் முக்கியத்துவம் பெற்றுள்ள கிளிநொச்சி – பூநகரி நகரத்தை அபிவிருத்தி செய்வதற்காக  500 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்ய ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ளார்.

பதுளை போதனா வைத்தியசாலையில் இருதய, நுரையீரல் பிரிவை நிறுவுவதற்கும் அவற்றுக்கு தேவையான உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கும் 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்படவுள்ளது.

சுற்றுலா ஹோட்டல்கள், ஓய்வு விடுதிகள் ஆகியவற்றில் சிகிச்சை நிலையங்களை அமைப்பதற்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

வரவு செலவு திட்டம் மீதான விவாதமும் வாக்கெடுப்பும் 

2024 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தில், அரசாங்கத்தின் மொத்த செலவீனம் ஏறத்தாழ 7,833 மில்லியன் ரூபாவாக அமைந்திருப்பதுடன், இதில் பொதுச் சேவைக்கான செலவீனத்திற்கு 3,861 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 2024 நிதியாண்டில் இலங்கையில் அல்லது வெளியில் திரட்டப்பட வேண்டிய பணத்திற்கு அமைவான சட்டங்களின் நியதிகளின் படி, நிதியாண்டு 2024 இல் பெற்றுக்கொள்ளக் கூடிய கடன், 3,900 மில்லியன் ரூபாவிற்கு உட்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒதுக்கீட்டு சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், அரசாங்க நிதிகள் பற்றிய குழுவில் சமர்ப்பிக்கப்பட்டு கடந்த 09 ஆம் திகதி அனுமதி பெறப்பட்டது.

இதனிடையே, 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை (14) ஆரம்பமாகவுள்ளது.

வரவு செலவு திட்டம் தொடர்பிலான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் மாதம் 14 ஆம் திகதியிலிருந்து நவம்பர் மாதம் 21 ஆம் திகதி வரை 7 நாட்கள் நடைபெறவுள்ளது.

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு  21 ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளது.

வரவு செலவு திட்டக் குழுநிலை விவாதம் அல்லது வரவு செலவு திட்டம் தொடர்பிலான மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் நவம்பர் மாதம் 23 ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளதுடன், மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் டிசம்பர் 13 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

வரவு செலவு திட்டக் குழுநிலை விவாதம் எனப்படுகின்ற மூன்றாம் வாசிப்பு மீதான  வாக்கெடுப்பு டிசம்பர் 13 ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளது.

வரவு செலவு திட்டத்தில் துண்டு விழும் தொகை

இன்று (13) சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு அமைய, 2024 ஆம் ஆண்டில் அரச வருமானம் 04,172 பில்லியன் ரூபாவாகும்.

2024 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கு அமைய, அரசாங்கத்தின் மொத்த செலவீனம் 06,978 பில்லியன் ரூபாவாகும்.

இதற்கிணங்க, வரவு செலவு திட்டத்தில் துண்டுவிழும் தொகை 02,851  மில்லியன் ரூபா.

அடுத்த வருடத்தில்  கடனையும் வட்டியையும் செலுத்துவதற்காக அரசாங்கம் 6,919 பில்லியன் ரூபாவை செலவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி, அடுத்த வருடத்திற்கான கடன் தேவை 7,350 பில்லியன் ரூபாவாகும்.

இதற்கிணங்க, அரசாங்கத்தின் கடன் எல்லையான 3900 பில்லியன் ரூபாவை மேலும் 3450 பில்லியன் ரூபாவால் அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.