கோட்டாபய ராஜபக்ஸ, மஹிந்த ராஜபக்ஸ, பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட பிரதிவாதிகளின் தவறான பொருளாதார முகாமைத்துவ தீர்மானங்கள் காரணமாக மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 2019 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் எடுத்த தவறான பொருளாதார முகாமைத்துவ தீர்மானங்கள் காரமாணக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அளுவிகாரே, விஜித் மலல்கொட மற்றும் முர்து பெர்ணான்டோ ஆகிய நீதியரசர்கள் குழாத்தினால் இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த மனு மீதான விசாரணையில் பங்கேற்ற ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாத்தின் நீதியரசர் பிரியந்த ஜயவர்தன இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் பி.பி.ஜயசுந்தர,மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஸ்மன் ஆகியோர் இந்த மனுவின் ஏனைய பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
கோட்டாபய ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்த பின்னர் வர்த்தகர்களுக்கு வழங்கிய 681 பில்லியன் ரூபா வரி நிவாரணம், தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அதிக தாக்கம் செலுத்தியதாக மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதியை 203 ரூபாவாக பேணியமை, சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் அந்நிய செலாவணியில் பற்றாக்குறை நிலவிய போது 500 மில்லியன் டொலர் இறையாண்மை பிணை முறிகளை மீள செலுத்துவதற்கு எடுத்த தவறான பொருளாதார தீர்மானங்கள் இவற்றில் சிலவாகும்.
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மஹிம் மெண்டிஸ், வணிக சபையின் முன்னாள் தலைவர் சந்திரா ஜயரத்ன, முன்னாள் நீச்சல் வீரர் ஜூலியன் போலிங், ஷெஹான் கனகரத்ன, மற்றும் ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நெஷனல் நிறுவனம் ஆகிய தரப்பினர் இந்த அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணையின் பின்னர் மனுதாரர்களுக்கு தலா 150,000 ரூபா செலுத்துமாறும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.