சபைக்குத் தலைமை தாங்குகின்ற தலைவர் அவர்களே!
வரவுசெலவுத் திட்டம் சம்பந்தமான சில கருத்துக்களைக் கூறுவதற்கு முன்பு இன்று வட்டுக்கோட்டை பகுதியிலே நடந்திருக்கக் கூடிய காவல் நிலைய மரணம் தொடர்பான ஒரு விடயத்தை இந்த சபையிலே கூறுவதற்கு நான் விளைகிறேன்.
முதலாவதாக, இந்த மாதம் எட்டாம் திகதி நாகராஜா அலெக்ஸ் என்ற 28வயதான ஒரு இளைஞர் சித்தங்கேணி பகுதியிலே வட்டுக்கோட்டைப் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். அவரை 8ம் திகதி பிடித்தவர்கள் பின்பு 12ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.
அவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்படி நீதிபதி அவர்கள் கட்டளையிட்டு 12ம் திகதி தொடக்கம் 16ம் திகதிவரையும் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்பு அவர் வைத்தியசாலையால் விடுவிக்கப்பட்ட பின்பு அவரை யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் கொண்டுபோய் வைத்தார்கள். மீண்டும் அவர் 19ம் திகதி நோய்வாய்ப்பட்டு விட்டார் என்ற காரணத்திற்காக மீண்டும் வைத்தியசாலைக்கு கொண்டுவந்தபோது கொண்டுவந்து ஏறக்குறைய ஒரு மணித்தியாலத்தில் அவர் இறந்துவிட்டார்.
அவரை பிரேத பரிசோதனை செய்த வைத்திய அதிகாரி மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார் அது ஒரு இயற்கை மரணமல்ல, அவருக்கு கிட்னியிலே பிரச்சினை, அடித்த காயத்தால் ஏற்பட்ட வருத்தங்கள் இருக்கின்றது. பல அடிகாயங்கள் இருக்கின்றது ஆகவேதான் அவர் இறந்திருக்கிறார் என்று சொல்லியிருக்கின்றார். இதன் காரணமாக இரண்டு பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றார்கள். இந்த இடமாற்றம் என்பது, சாதாரணமாக தமிழ் பகுதிகளிலே இப்படியான நிலைமைகள் நடந்துவிட்டால் இடம் மாற்றுவதும் அதை மறந்து விடுவதும் இப்படியான ஒரு நிலைப்பாடே தொடர்ந்து இருந்துகொண்டு வருகின்றது. இதற்கு ஒரு சரியான விசாரணை வைக்கப்பட்டு அந்த குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டாலேயொழிய இப்படியான நிலைமைகளை ஒருபோதும் திருத்த முடியாது. நிற்பாட்டவும் முடியாது. இது ஒரு மிகப் பாரதூரமான விசயம் என்பதைக் கருத்திற்கொண்டு அரசாங்கம், முக்கியமாக பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்ளுகின்றேன்.
ஜனாதிபதி அவர்களும் இதில் தலையிட்டு நிச்சயமாக உடனடியான ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த குடும்பம் மிக வறிய குடும்பம். அவர் மரம் கடத்துகிறார் என்று முதலில் பிடிபட்டார். இப்போது களவு என்று பொலிசார் சொல்லுகிறார்கள். இப்படியான விசயங்கள் அங்கு நடந்துகொண்டிருகின்றது. இவைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.
தலைவர் அவர்களே! வரவுசெலவுத் திட்டம் சம்பந்தமாக ஜனாதிபதி அவர்கள் 2024ம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்ட உரையை ஆரம்பித்தபோது, புத்த பகவானுடைய பல போதனைகளை எடுத்துச் சொன்னார். அதில் முக்கியமாக சமநிலையான வாழ்வு என்ற அந்த போதனையை எடுத்துக் கூறினார். அதில் அர்த்தப்படுவதை நான் தமிழில் சொல்வதாக இருந்தால், இருப்பதைக் கொண்டு வாழ்வது. அந்த இருப்பதைக் கொண்டு வாழ்வதிலிருந்து அவர் ஒரு விசயத்தைச் சொல்லுகிறார், உங்களுக்கு இதுக்கு மேலே இனி எதுவும் கிடைக்கப்போவதில்லை. இருக்கிறதை வைத்து வாழப் பழுகுங்கள் என்று, அதாவது மக்களுக்கு இன்னும் வர இருக்கின்ற பல கஸ்டங்களைப் பற்றி சித்தார்த்தனுடைய போதனைகளை வைத்து விளங்கப்படுத்தப் பார்க்கின்றார். இருப்பதைக் கொண்டு வாழ்வது என்றால், இருக்கவேண்டும், வாழ்வதற்கு. மக்களிடம் எதுவுமே இல்லை. இன்று சாதாரண மக்கள் அவர்கள் எந்தப் பகுதியிலே வாழ்பவர்களாக இருந்தாலும் வறுமைக் கோட்டுக்குக் கீழேதான் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். மிகவும் கஸ்டமான நிலையிலேதான் பெரும்பான்மையான மக்கள் வாழுகிறார்கள். அரச உத்தியோகத்தர்கள்கூட கிடைக்கின்ற சம்பளம் போதாமல் மிகக் கஸ்டமான வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருகின்றார்கள்.
இதிலே புத்தருடைய போதனைகளைப் பற்றி கூறுகின்றபோது, பௌத்த மதம் என்பதே ஒரு மானுட நேய மதம். இந்த நாட்டிலே மானுட நேயத்தை மறந்து நீண்ட காலமாகின்றது. இனங்களுக்கிடையே ஒற்றுமையை இல்லாமல் பண்ணி மிக நீண்ட காலமாகின்றது. நான் நினைக்கின்றேன் சுதந்திரம் அடைந்ததற்குப் முன்பு நாட்டிலே இருந்த மக்கள் மத்தியிலே ஓரளவுக்கு மானுட நேயம் இருந்தது. எங்களை ஆண்டவர்கள் மத்தியில் என்பதை விடுத்து இந்த நாட்டிலே இருந்த சகல இன மக்கள் மத்தியிலுமே ஒரு இன ஒற்றுமை இருந்தது. மனித நேயம் இருந்தது. அவைகளெல்லாம் இன்று மறக்கப்பட்டு சிறுபான்மை இனங்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையிலே, அரசியல் ரீதியாக அவர்களுடைய அரசியல் உரிமைகள் எல்லாம் பறிக்கப்பட்ட நிலையிலே வாழுகின்ற ஒரு நிலைமையைத்தான் நாங்கள் தொடர்ந்து பார்த்து வந்திருக்கின்றோம்.
இந்த நாடு வங்குரோத்து நிலையை பொருளாதார ரீதியிலே அடைந்திருக்கிறது என்றால், அதற்கு மிக முக்கியமான காரணம் பொருளாதாரப் பிரச்சினையை விடுத்து மிக முக்கியமான காரணம் அரசியல் காரணம்தான். பொருளாதாரம் என்று நான் கூறுவது, நான் நினைக்கின்றேன் உலகத்திலே ஆகக்கூடிய அளவிலே ஊழல் நடப்பது இந்த நாடாகத்தான் இருக்கமுடியும். இந்த நாட்டு வளங்கள் விற்கப்பட்டது, இல்லாமல் செய்யப்பட்டது ஊழல்களால்தான். அதனால்தான் இந்த நாடு பொருளாதாரத்திலே பிற்பட்டிருக்கின்றது என்று பலர் சொன்னார்கள். என்னைப் பொறுத்தமட்டில் அதுவும் ஒரு காரணம்தான். அதைவிட மிக முக்கியமான காரணம், தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வு காணப்படாதது என்பதுதான் என்னைப் பொறுத்தமட்டிலே நான் சொல்லக்கூடிய விசயம். ஏனென்றால் அதை நாங்கள் நேரடியாக பார்த்திருக்கின்றோம்.
யுத்தத்திற்கும், யுத்த காரணங்களுக்காகவும், நேரடியாக யுத்தத்திற்கும் செலவு செய்யப்பட்ட பணம் வடகிழக்கிலே ஏற்பட்ட அழிவுகள், பொருளாதார அழிவுகள், இவைகள் எல்லாவற்றையும் எடுத்துப் பார்க்கின்றபோது நிச்சயமாக பொருளாதாரத்தினுடைய பின்னடைவுக்கு மிக முக்கியமான காரணம் யுத்தம்தான். அதாவது இவ்வளவு அழிவு, நாடு இந்தளவுக்கு வங்குரோத்திலே போய்விட்டது என்று சொல்லுகிறோம், பொருளாதார ரீதியாக பின்னடைந்து விட்டது என்று சொல்லுகிறோம். ஆனால் இந்த இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இன்றுகூட எங்களுக்குள் ஒற்றுமைப்பட முடியவில்லை.
கிரிக்கெட் சபைக்கு கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு உண்மையிலேயே நாங்கள் எல்லாரும் 225 பேருமே ஒற்றுமைப்பட்டோம். ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. அரசியல் காரணங்களுக்காக வாக்கை கேட்கவில்லை, வாக்கைப் போடவில்லை என்ற கதைகள் சொல்லப்பட்டாலும், உண்மையிலே 225பேரும் அதில் ஒற்றுமையாக வாக்களித்தார்கள். இந்த கிரிக்கெட்டுக்கு காட்டுகின்ற விருப்பத்தை ஏன் நாங்கள் இந்த தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதிலே காட்டமுடியாமல் இருக்கிறது என்பது எங்களுக்கு விளங்கவில்லை. உண்மையிலே நாங்கள் எல்லாருமாக சேர்ந்து அந்தப் பிரச்சினைக்கு ஒரு நியாமான தீர்வைக் கண்டால் நிச்சயமாக இந்தப் பொருளாதாரப் பிரச்சினைக்கும் ஒரு நியாமான தீர்வைக் காணமுடியும்.
இநத வரவுசெலவுத் திட்டத்தை எடுத்துக்கொண்டால் இதிலே சொல்லப்படக்கூடிய விசயங்களாக, இதிலே ஏறக்குறைய 2500 பில்லியனுக்குக் கீழ் கூடுதலாக துண்டு விழுகிறது. எப்படியாக இந்தத் தொகையை எடுத்து இதை சரிக்கட்டுவது என்பதை இதிலே சரியான முறையில் காட்டப்படவில்லை. வரவுசெலவுத் திட்டத்தில் காணப்படும் துண்டுவிழும் தொகையை ஈடுசெய்வது எப்படி என்பதற்கான ஒரு சரியான உபாயங்கள் எதுவுமே இதில் காட்டப்படவில்லை. இதை ஈடுசெய்வதற்கு ஒன்றில் கடன் வாங்க வேண்டும் அல்லது காசு அச்சடிக்க வேண்டும். அல்லது வரிகளைக் கூட்டவேண்டும். வரிகளைக் கூட்டுகின்ற விசயம்தான் நிச்சயமாக வற் மூலம் கூட்டுவதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றது. முன்னேற்றகரமான வரிகளைக் கூட்டுவதில் எவருக்குமே ஆட்சேபனை இருக்க முடியாது. சாதாரண வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழக்கூடிய அல்லது மிகக் குறைந்த சம்பளத்திலே இருக்கக்கூடிய அரச உத்தியோகத்தர்கள் இப்படியாகப் பலரைப் பாதிக்காத விதத்தில், மிகப்பெரிய அளவிலே வரிகளை ஏமாற்றிக்கொண்டு இருக்கக்கூடியவர்களைக் கண்டுபிடித்து அந்த வரிகளைப் பெறுவதன்மூலமே ஓரளவுக்கு இந்த தொகையை ஈடுசெய்ய முடியும். அதைவிடுத்து வற் வரியைக் கூட்டுவதன்மூலம் சாதாரண பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட இருக்கின்றார்கள் என்பது ஒரு விடயம்.
அடுத்ததாக மீன்பிடித் தொழிலுக்காக ஒரு தொகை பணம் ஏறக்குறைய 5000 மில்லியன் ஒதுக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் வடகிழக்கு மீனவர்களில் முக்கியமாக வடக்கு மீனவர்கள் ஒரு காலத்திலே இலங்கையின் மீன்பிடியிலே மூன்றில் ஒரு பகுதிக்கும் கூடுதலாக அதாவது ஏறக்குறைய அரைவாசிக்கும் கூடுதலான மீனைப் பிடித்து தெற்குப் பகுதிகளுக்கு அனுப்பியவர்கள். இன்று அந்தப் பகுதிகளிலே தெற்கிலிருந்து சட்டவிரோதமாக மீன்பிடிப்பவர்கள் அதைவிட முக்கியமாக இந்தியாவிலே இருந்து வந்து இந்த பொட்டம் ட்ரோலரிங் என்பதைப் பாவித்து அந்தப் பகுதிகளை ஒன்றுமே இல்லாமல் அழித்துக் கொண்டிருப்பவர்கள், இவைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமல் வெறுமனே நிதியை ஒதுக்குவதன்மூலம் அந்த மீன்பிடித் தொழிலாளர்களுடைய வாழ்க்கைத் தரத்தை நீங்கள் உயர்த்த முடியாது. அவர்களுக்கு வருமானங்களைக் கூட்ட முடியாது. ஆகவே அதை முதலிலே செய்வதற்கான முழுமையான முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.
அதேபோல் அம்பாறை யாழ்ப்பாணம் பகுதிகளுக்காக பெருமளவிலே முதலீடு செய்து பல அபிவிருத்திகளைச் செய்வதற்கு இதிலே பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் யாழ்ப்பாணத்திலே இருக்கக்கூடிய பல தொழிற்சாலைகள், சிறு தொழிற்சாலைகள் எல்லாம் அழிந்துகொண்டிருக்கின்றது. அவைகளை மீண்டும் இயக்குவதற்கான நிதிகளை ஒதுக்கி அவைகளை செய்யவேண்டும் என்று கேட்டபோது அவைகள் நடைபெறவில்லை.
என்னால் இந்த வரவுசெலவுத் திட்டத்திலே ஒரு விசயத்தை மாத்திரம் காணக்கூடியதாக இருக்கின்றது, நிதி இல்லை, கடந்தகாலங்களில் நடந்த வரவுசெலவுத் திட்டங்களைப்போல இந்த வரவுசெலவுத் திட்டத்திலும் நிதி இல்லாமல் வெறுமனே வெறும் வாய்ப் பேச்சிலே எழுத்திலே இருந்துவிட்டு இந்த வருடமும் செல்லப்போகிறது என்றுதான் எங்களுடைய பயம் இருக்கின்றது. எந்த விதத்திலுமே அபிவிருத்தி செய்வதற்கான நிதிகள் கிடைக்காது.
இதைக் கூறுகின்ற இதேநேரத்தில் இன்னொரு விசயத்தையும் நான் கூற விரும்புகின்றேன், சமய ரீதியாக இன்று இருக்கக்கூடிய பிரச்சினை, பௌத்த ஆதிக்கம் கூடிக்கொண்டு வருகின்றது. இதற்கு ஒரு மிக முக்கியமான காரணம் ஒரே ஒரு அமைச்சர் அதாவது பௌத்த மதத்துக்கான ஒரு அமைச்சராக இருக்கின்றார். கடந்த காலங்களிலே அடுத்த மூன்று மதங்களுக்கும் ஆகக்குறைந்தது இராஜாங்க அமைச்சர்களாவது இருந்திருக்கின்றார்கள். இந்து மதத்திற்கும் இருந்திருக்கின்றார். கடைசியாக இருந்த மகேஸ்வரன். மிக சிறப்பாக இந்து மதத்திற்கான விடயங்களைச் செய்தார். அதேநேரத்தில் அவர் எந்தவிதத்திலும் பௌத்த மதத்தின் விடயங்களை தடுக்கவில்லை. அதேபோல ஆகக் கடைசியாக இருந்தவர் எங்களுடைய மனோ கணேசன் அவர்கள். அவரும் மிகச் சிறப்பாக பல விசயங்களைச் செய்து வந்திருக்கின்றார். அதேபோல ஜோன் அமரதுங்க அவர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு இருந்திருக்கின்றார். இப்படியாக பல விசயங்களை இந்த அரசாங்கம் கவனிக்காமல் மிக சிறுசிறு விசயங்களைச் செய்யாமல் இருக்கின்றது.
அதே நேரத்தில் சில விடயங்களை செய்தும் இருக்கின்றார்கள். சிறைச்சாலைகளிலே இருக்கக்கூடியவர்களை விடுவிக்கச் சொல்லி கேட்டுக் கேட்டு பலர் விடப்பட்டிருக்கின்றார்கள். இன்னும் ஒரு சிலர் இருக்கின்றார்கள். அவர்களையும் கட்டாயம் விடவேண்டும்.
அதேபோல் இந்தக் காணிப் பங்கீடுகள், அதைவிட முக்கியமாக மட்டக்களப்பிலே மேய்ச்சல் தரை பிரச்சினையிலே ஜனாதிபதி அவர்கள் உத்தரவு கொடுத்து ஒருமாதம் ஆகிவிட்டது. இன்னும் அந்தப் பிரச்சினைக்கு தீரவில்லை. ஆகவே, தமிழ் மக்கள் மத்தியிலே நிச்சயமாக ஒரு கேள்வி வருகின்றது. ஜனாதிபதி அவர்களால் கொடுக்கக்கூடிய உத்தரவுகள் நிறைவேற்றப்படுமா? வெறுமனே பேச்சளவிலா போகிறது. ஆகவேதான் நாங்கள் நம்பிக்கை இழந்திருக்கின்றோம். இந்தப் பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கை இழக்கின்றோம்.
13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்நடத்துவேன் என்ற பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து அந்த பேச்சுவார்த்தைகள் மூடிவைக்கப்பட்டிருக்கின்ற நிலையிலேயே இருக்கின்றது. இவைகளையெல்லாம் கவனத்தில் எடுத்து ஒரு நியாயமான தீர்வைத் தரவேண்டும் என்று கேட்கிறேன். நன்றி.
(21.11.2023)