கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக இன்று பெரும்பாலானோர் வருகை தந்ததால் பத்தரமுல்லை குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலக வளாகத்தில் அமைதியின்மை ஏற்பட்டது. இன்றைய தினத்தை முன்கூட்டியே பதிவு செய்யாமல் குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் தலைமையகத்திற்கு பலர் வருகை தந்ததால் இந்நிலைமை ஏற்பட்டது. விண்ணப்பதாரர்களின் நலனுக்காகவும் செயல்முறையை சீரமைக்கவும் கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான புதிய வழிமுறையை குடிவரவு – குடியகல்வு திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கிணங்க இன்று முதல் கடவுச் சீட்டு வழங்கும் புதிய முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய கடவுச்சீட்டுகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் www.immigration.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும்.

ஒன்லைனில் பதிவு செய்ததன் பின்னர், முன்னுரிமை முறையின் படி கடவுச்சீட்டுகள் வழங்கப்படும் என குடிவரவு – குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட போதிலும் இன்று காலை பத்தரமுல்ல பகுதியிலுள்ள குடிவரவு குடியகல்வு – திணைக்கள அலுவலகத்திற்கு கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்காக அதிகளவானோர் வருகை தந்ததால் அங்கு நெரிசல் ஏற்பட்டுள்ளது.

திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்பவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டதையடுத்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

குடிவரவு – குடியகல்வு திணைக்களத்திற்கு முன்பாக நீண்ட வரிசைகளும் நெரிசலும் காணப்பட்டதுடன் நிலைமையை கருத்திற்கொண்டு பொலிஸாரை வரவழைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததும் குறிப்பிடத்தக்கது.