கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பல் ஒன்றில் ஏற்பட்ட தீ பரவல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு துறைமுகங்கள் கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பணிப்புரை விடுத்துள்ளார். துறைமுக அதிகார சபையின் தலைவருக்கு இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகத் துறைமுகங்கள் கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுவிஸ்சர்லாந்து நாட்டுக்குச் சொந்தமான கப்பலொன்றே இன்று அதிகாலை தீ பரவலுக்கு உள்ளானது.

இதனையடுத்து துறைமுக தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

சிங்கப்பூரிலிருந்து வந்த குறித்த கப்பல் 995 கொள்கலன்களை இறக்கிவிட்டு 880 கொள்கலன்களை ஏற்றுவதற்காகக் கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளது.

எவ்வாறாயினும் இந்தத் தீ பரவல் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் துறைமுக அதிகார சபையின் தலைவருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.